தர்மசாலா: ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் நியூசண்டிகரில் நடந்த ஒரே ஒரு டெஸ்ட்டில் இந்தியா வென்ற நிலையில் அடுத்ததாக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடக்கிறது. இதில் முதல் போட்டி நாளை தர்மசாலாவில் நடைபெற உள்ளது. இதற்காக இரு அணிகளும் அங்கு வந்தடைந்த நிலையில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். கேப்டன் சுப்மன் கில் தலைமையிலான அணியில் அவருடன் தொடக்க வீரராக ரோகித்சர்மா களம் இறங்குவார்.
துணை கேப்டன் ஸ்ரேயாஸ், கே.எல்.ராகுல், இஷான் கிஷன், ஆல்ரவுண்டர்கள் வாஷிங்டன் சுந்தர், அறிமுக வீரராக ஹர்ஷ் துபே, நிதிஷ்குமார் ரெட்டி ஆகியோர் இடம்பெறக்கூடும். பவுலிங்கில் பிரசித் கிருஷ்ணா, அர்ஷ்தீப் சிங்,பிரின்ஸ் யாதவ் அல்லதுகுர்னூர் பிரார், சுழலில் குல்தீப் யாதவ் வலுசேர்ப்பர்.
மறுபுறம் ஆப்கன்அணியில் பேட்டிங்கில் கேப்டன் ஹஷ்மத்துல்லா ஷாஹிதி, இப்ராஹிம் ஜத்ரான், ரஹ்மானுல்லா குர்பாஸ், ஆல்ரவுண்டர்கள் ரஹ்மத் ஷா, முகமது நபி, அஸ்மத்துல்லா உமர்சாய், சுழலில் ரஷித்கான் உள்ளிட்டவீரர்கள் இந்தியாவுக்கு நெருக்கடி அளிக்கலாம். பகலிரவு போட்டியாக நடைபெறும் இந்த ஆட்டம் இந்திய நேரப்படி மதியம் 1.30 மணிக்கு தொடங்குகிறது. இதனை ஸ்டார்ஸ்போர்ட்ஸ் சேனலில் பார்க்கலாம்.
நேருக்கு நேர்
இரு அணிகளும் இதற்கு முன் 4 முறை ஒருநாள் போட்டியில் மோதி உள்ளன. இதில் 3 போட்டியில் இந்தியா வென்றுள்ள நிலையில் ஒரு போட்டி டையில் முடிந்துள்ளது. தர்மசாலாவில் இந்தியா இதற்கு முன் 5 ஒருநாள் போட்டிகளில் ஆடி 3ல் வெற்றி,2ல் தோல்வி அடைந்துள்ளது. ஆப்கன்இங்கு வங்கசேத்திற்கு எதிராக ஒரு போட்டியில் ஆடி தோல்வி அடைந்துள்ளது.
