×

கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் விஜய் தரிசனம்: கருப்பு கொடி போராட்டம் நடத்திய கன்னட அமைப்பினர் கைது

மங்களூரு: டெல்லியில் இருந்து தமிழக முதல்வர் விஜய் நேற்று மங்களூரு விமான நிலையத்துக்கு தனி விமானத்தில் வந்திறங்கினார். அங்கு கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சர் யு.டி.காதர் பூங்கொத்து கொடுத்து அவரை வரவேற்றார். பின்னர் அங்கிருந்து கார் மூலம் உடுப்பி மாவட்டத்திலுள்ள கொல்லூர் மூகாம்பிகை கோயிலுக்கு அவர் சென்றார்.

மூகாம்பிகை கோயிலில் பூர்ண கும்ப மரியாதையுடன் கோயில் நிர்வாகிகள் முதல்வர் விஜயை வரவேற்றனர்.  சுமார் 20 நிமிடங்கள் மூகாம்பிகை தரிசனம் செய்த விஜய் பின்னர் வெளியே வந்து ரசிகர்களை பார்த்து கையை அசைத்து விட்டு தானே காரை ஒட்டி தங்கும் விடுதிவரை சென்றார். விஜய் வருகையை ஒட்டி பக்தர்களுக்கு இரண்டு மணி நேரம் தரிசனம் நிறுத்திவைக்கப்பட்டது.

தரிசனம் முடிந்து மீண்டும் மங்களூரு விமான நிலையத்துக்கு கார் மூலம் வந்த விஜய், சென்னைக்கு தனிவிமானத்தில் புறப்பட்டு சென்றார். இதற்கிடையே, மேகதாது திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முதல்வர் விஜய் வருகையை கண்டித்து கன்னட அமைப்பினர் கருப்பு கொடி போராட்டம் நடத்தினர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.

* வெள்ளி வாள் காணிக்கை
முதல்வர் விஜய் கருவறைக்குள் நுழைந்து மிகுந்த பக்தியுடன் சாமி தரிசனம் செய்தார். அப்போது, அவர் தான் கொண்டு வந்திருந்த 1.6 கிலோ எடையுள்ள அழகான வெள்ளி வாளை மூகாம்பிகை தேவிக்கு காணிக்கையாக செலுத்தினார். பிறகு, விஜய் கோயிலின் தலைமை அர்ச்சகரிடம் ஒரு சிறப்பு வேண்டுகோளை விடுத்தார். அதில், `நான் கொண்டு வந்த இந்த வெள்ளி வாளைக் கோயிலின் கருவூலத்தில் வைப்பதற்குப் பதிலாக, தினமும் அம்மனுக்கு நடைபெறும் ‘நித்ய பூஜை’யின் போது பயன்படுத்த வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டார். அவரின் கோரிக்கையை அர்ச்சகரும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டார்.

Tags : Vijay ,Kollur Mookambika ,Mangaluru ,Tamil Nadu ,Chief Minister ,Mangaluru airport ,Delhi ,Karnataka ,Health Minister ,U.T. Khadhar ,Kollur Mookambika temple ,Udupi district ,
× RELATED அகில இந்திய காங்கிரஸ் தலைவராகிறார்...