×

எண்ணெய் நிறுவனங்கள் திடீர் கட்டுப்பாடு ஒரு வாகனத்திற்கு 200 லிட்டர் டீசல் தான்: பங்க்குகளில் எரிபொருள் வாங்கவும் தொழிற்சாலைகளுக்கு தடை விதிப்பு

புதுடெல்லி: பெட்ரோல் பங்க்குகளில் வாகனத்துக்கு அதிகபட்சம் ஒரு நாளுக்கு 200 லிட்டர் மட்டுமே வழங்க வேண்டும் எனவும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. போர் பதற்றம் நீடித்து வரும் நிலையில், இந்த திடீர் கட்டுப்பாடுகளை எண்ணெய் நிறுவனங்கள் விதித்துள்ளன. ஈரான் – இஸ்ரேல் போர் காரணமாக கச்சா எண்ணெய் வரத்து பாதிக்கப்பட்டது. இதனால் பெட்ரோல் பங்க்குகளில் பெட்ரோல் கிடைக்காமல் மக்கள் அவதிப்படும் நிலை உருவானது.

இந்நிலையில் ஹார்முஸ் நீரிணை வழியாக இந்தியாவுக்கு வரும் எண்ணெய் கப்பல்கள் அனுமதிக்கப்பட்ட பிறகு நிலைமை சீரானது. இருப்பினும், தற்போது போர் பதற்றம் நீடித்து வரும் நிலையில், எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் வாங்க புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. இதன்படி தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள் உள்ளிட்டவை இனி பெட்ரோல் பங்குகளில் இருந்து பெட்ரோல் மற்றும் டீசலை வாங்கக் கூடாது என்று உத்தரவிட்டுள்ளது.

அவர்கள் நேரடியாக எண்ணெய் நிறுவனங்களின் மொத்த கொள்முதல் முறையின் மூலம் மட்டுமே எரிபொருள் வாங்க வேண்டும். இந்த உத்தரவு முதற்கட்டமாக 90 நாட்களுக்கு அமலில் இருக்கும். பின்னர் தேவையை பொருத்து நீட்டிக்கப்படலாம் என கட்டுப்பாட்டு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வால், இழப்பீட்டை ஈடுகட்டும் வகையில் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை தொடர்ந்து உயர்த்தி வருகின்றன.

தற்போது டீசல் சென்னையில் ரூ.99.55 டெல்லியில் டீசல் லிட்டர் 95.20, மும்பையில் ரூ.97.83 எனவும், பெட்ரோல் சென்னையில் ரூ. 107.77, டெல்லியில் ரூ. 102.12, மும்பையில் ரூ.111.21 எனவும் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால், மொத்த கொள்முதல் செய்யும் தொழிற்சாலைகள் போன்றவற்றுக்கு விலை அதிகம். இந்த விலை வித்தியாசம் காரணமாக மொத்த கொள்முதல் செய்யும் தொழிற்சாலைகள், நிறுவனங்கள் பெட்ரோல் பங்க்குகளில் இருந்து எரிபொருளை வாங்க தொடங்கின.

இதன் காரணமாக சில பகுதிகளில் டீசல் உள்ளிட்ட எரிபொருட்களுக்கான தேவை அசாதாரணமாக அதிகரித்தது. இதனைத் தொடர்ந்து மேற்கண்ட கட்டுப்பாட்டை எண்ணெய் நிறுவனங்கள் விதித்துள்ளன. ஒன்றிய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் ஜூன் 11ம் தேதி பிறப்பித்த அதிவேக டீசல் விற்பனை தொடர்பான உத்தரவை தொடர்ந்து மேற்கண்ட முடிவை எண்ணெய் நிறுவனங்கள் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த உத்தரவால் கார், எஸ்யுவி, பைக், வேன், லாரி பயனாளர்களுக்கு பெரும்பாலும் எந்த பாதிப்பும் இல்லை. ஒரு முறை நிரப்பும் அளவு பொதுவாக 20 முதல் 100 லிட்டருக்குள் தான் இருக்கும். ஆனால், பெரிய ஜெனரேட்டர்கள், சுரங்கத் தொழில்கள், கட்டுமான நிறுவனங்கள், தொழிற்சாலைகள் போன்ற அதிக டீசல் பயன்படுத்துவோருக்கு இந்த கட்டுப்பாடு பொருந்தும் என கூறப்படுகிறது.

Tags : New Delhi ,Iran ,Israel ,
× RELATED அளவிற்கு மேல் நச்சுத் தன்மை வாய்ந்த...