×

மாநிலங்களவை தேர்தலில் வேட்புமனு நிராகரிப்பதற்கு எதிர்ப்பு காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜனின் மனு தள்ளுபடி: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு

புதுடெல்லி: மபி மாநிலங்களவை தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜனின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மபி மாநிலங்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் மீனாட்சி நடராஜன் வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். ஆனால், ஐதராபாத் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள ஒரு வழக்கு குறித்த விவரங்களை அவர் தனது தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் மறைத்துவிட்டார் என்று பா.ஜ வேட்பாளர் மகேஷ் கேவத் மற்றும் பா.ஜ மாநிலப் பொதுச்செயலாளர் ராகுல் கோத்தாரி ஆகியோர் தேர்தல் அதிகாரியிடம் புகார் தெரிவித்தனர்.

இதையடுத்து, கடந்த ஜூன் 9ம் தேதி மீனாட்சி நடராஜனின் வேட்புமனுவை தேர்தல் அதிகாரி சஞ்சய் சர்மா நிராகரித்து உத்தரவிட்டார். தேர்தல் அதிகாரியின் மேற்கண்ட நடவடிக்கைக்கு எதிராக காங்கிரஸ் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் அவசர மனு தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து அந்த மனு நீதிபதிகள் பி.கே.மிஸ்ரா மற்றும் ஏ.எஸ்.சந்துர்கர் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று அவசர வழக்காக விசாரணைக்கு வந்தது.

அப்போது காங்கிரஸ் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி,\\\\” மீனாட்சி நடராஜன் விவகாரத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரி முற்றிலும் தன்னிச்சையாகவும், தவறாகவும் செயல்பட்டு வேட்புமனுவை நிராகரித்துள்ளார். குறிப்பாக ஐதராபாத் நீதிமன்றத்தில் உள்ள தனி நபர் புகாரில் மீனாட்சி நடராஜனுக்கு எதிராக நீதிமன்றம் இன்னும் முறையான குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்யவில்லை.

மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் பிரிவு 33ஏவின் படி, இரண்டு ஆண்டுகளுக்கு மேல் தண்டனை விதிக்கப்படக்கூடிய வழக்குகளில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டிருந்தால் மட்டுமே அதை பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிட வேண்டும். வெறும் நீதிமன்ற நோட்டீஸ் கொடுக்கப்பட்டு நிலுவையில் உள்ள குற்றவியல் வழக்கு என்று தெரிவிக்க முடியாது. இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தலையிட்டு ஒரு அவசர உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

இதையடுத்து எதிர்மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் முகுல் ரோத்தகி மற்றும் டி.எஸ்.நாயுடு\”இந்திய அரசியலமைப்பு சட்டம் 32வது பிரிவின் கீழ் இந்த மனுவை உச்ச நீதிமன்றம் விசாரிக்க அதிகாரம் கிடையாது. தேர்தல் விதிமுறைப்படி எந்தவொரு கட்டத்தில் வழக்கு நிலுவையில் இருந்தாலும், அதுகுறித்த முழு விவரங்களையும் வேட்பாளர்கள் தாக்கல் செய்யும் பிரமாணப் பத்திரத்தில் வெளிப்படையாக தெரிவிக்க வேண்டியது அவர்களது கடமை ஆகும் என்று தெரிவித்தனர்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ”இந்த விவகாரத்தில் காங்கிரஸ் தரப்பின் கோரிக்கையை ஏற்க முடியாது. எனவே மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்கிறது. குறிப்பாக அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 329(பி)யின் படி, தேர்தல் செயல்முறைகள் தொடங்கப்பட்ட பிறகு, வேட்புமனு நிராகரிப்பு போன்ற விவகாரங்களில் நீதிமன்றங்கள் தலையிட அதிகாரம் இல்லை.

இந்த விவகாரத்தில் மனுதாரரின் வாதத்தை ஏற்றுக்கொள்வது என்பது அரசியலமைப்பே வழங்காத ஒரு விதிவிலக்கை அரசியலமைப்பு சட்டத்தில் தலையிட வைப்பதற்கு சமமாகும். சில வழக்குகளில் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து நீதிமன்றங்கள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளும், ஆனால் அதேநேரத்தில் மற்ற வேட்பாளர்களை தேர்தல் வழக்கு என்ற சட்டப்பூர்வமான தீர்வுக்கு அந்த நடவடிக்கை தள்ளிவிடும்.

அதனால் தான் இதுபோன்ற விவகாரங்கள் நிராகரிக்கப்படுகிறது. மேலும் எந்தவொரு விளக்கமும், நிலைபெற்ற அரசியலமைப்பு நிலைப்பாட்டிற்கு முரணானது என்றும், அது ஊக்குவிக்கப்பட கூடாது எனவும் உச்ச நீதிமன்றம் அஞ்சுகிறது.இவை அனைத்தையும் அடிப்படையாக கொண்டு தான் மீனாட்சி நடராஜனின் தரப்பு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று திட்டவட்டமாக உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்தனர்.

* சீட் திருட்டு
உச்சநீதிமன்றம் தனது மனுவை தள்ளுபடி செய்த நிலையில் மீனாட்சி நடராஜன் கூறுகையில், இதில், சீட் திருட்டு நடந்துள்ளது அனைவருக்கும் மிக தெளிவாக தெரிகிறது. இது தனிப்பட்ட தோல்வி பற்றிய கேள்வி அல்ல, மாறாக ஜனநாயகம் மீண்டும் மீண்டும் சந்தித்து வரும் அதிர்ச்சிகளே அதிக கவலையளிப்பதாக அவர் கூறினார்.

* மீனாட்சி நடராஜனுக்கு எதிரான வழக்கு ஐதராபாத் நீதிமன்றம் தள்ளுபடி
தெலங்கானாவில் பாலியல் துன்புறுத்தல் மற்றும் கொலை மிரட்டல் விடுத்ததாக குற்றம் சாட்டி ஒரு பெண் தாக்கல் செய்த மனுவை ஐதராபாத் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. தெலங்கானா காங்கிரஸ் பிரமுகர் கம்பம் சிவகுமார் ரெட்டி என்பவர் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தினார். கொலை மிரட்டல் விடுத்தார் என ஸ்ரீலதா என்பவர் புகார் அளித்திருந்தார். இந்த வழக்கில், தெலங்கானா காங்கிரஸ் பொறுப்பாளர் மீனாட்சி நடராஜன், மாநில காங்கிரஸ் தலைவர் மகேஷ் கவுட் எம்எல்சி ஆகியோர் பிரதிவாதிகளாக சேர்க்கப்பட்டிருந்தனர்.

இந்த மனுவை நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்து சம்மந்தப்பட்ட நீதிமன்றத்தை அணுகுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. ஸ்ரீலதா அளித்த புகார் காரணமாகதான் மாநிலங்களவை தேர்தலில் மீனாட்சி நடராஜனின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. மேலும் மபியில் பாஜ வேட்பாளர்களாக போட்டியிட்ட 3 பேரும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதாக நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது.

Tags : Congress ,Meenakshi Natarajan ,Rajya Sabha ,Supreme Court ,New Delhi ,M.P. Rajya Sabha ,Congress party ,Hyderabad… ,
× RELATED அளவிற்கு மேல் நச்சுத் தன்மை வாய்ந்த...