போபால்: மபி சத்னாவின் நாகோத் அரச குடும்பத்திற்குச் சொந்தமான வரலாற்றுச் சிறப்புமிக்க ‘பர்சமனியா கார்ஹி’ இல்லத்தில் நீண்ட நாட்களாக நிலவி வந்த குடும்பத் தகராறில் வன்முறை வெடித்தது. இதில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இதில் அரச குடும்ப மருமகள் யோகிதா சிங் காயம் அடைந்தார். இவர் நாகோத் அரச குடும்பத்தைச் சேர்ந்தவரும், நாகோத் எம்.எல்.ஏ. நாகேந்திர சிங்கின் மருமகனுமான ருபேந்திர குமார் சிங் (பாபா ராஜா என்று அழைக்கப்படுபவர்) என்பவரின் முதல் மனைவி ஆவார்.
யோகிதாவின் வயிற்றில் குண்டு பாய்ந்த நிலையில், அவர் அவசர சிகிச்சைக்காக முதலில் சத்னாவிற்கு கொண்டு செல்லப்பட்டார். பின்னர் ரேவாவில் உள்ள விந்தியா பல்நோக்கு சிறப்பு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அவர் தற்போது ஆபத்தான நிலையிலிருந்து மீண்டுவிட்டதாகவும், ஆனால் தொடர்ந்து மருத்துவக் கண்காணிப்பில் இருப்பதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
