×

புதிய ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்க தமிழக அரசு எந்தவித அனுமதியும் வழங்கக் கூடாது: தலைவர்கள் வலியுறுத்தல்

சென்னை: புதிய ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்க தமிழக அரசு எந்தவித அனுமதியும் வழங்கக் கூடாது என்று தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர். வைகோ (மதிமுக பொதுச்செயலாளர்): கடலூர் மாவட்டம், பரங்கிப்பேட்டை அருகே கடலுக்குள் 4 ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்க கடலோர ஒழுங்குமுறை ஆணையத்தின் அனுமதி கோரி இந்துஸ்தான் ஆயில் நிறுவனம் விண்ணப்பித்துள்ளது. ஏற்கனவே அதே பகுதியில் செயல்பட்டு வரும் கிணறுகளில் எண்ணெய் இருப்பு குறைந்ததால் மேற்கொண்டு 4 கிணறுகள் அமைக்க இந்துஸ்தான் ஆயில் நிறுவனம் முடிவு செய்துள்ளது. பரங்கிப்பேட்டையில் இருந்து 18 கி.மீ தொலைவில் கடலுக்குள் ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்க விண்ணப்பம் அளிக்கப்பட்டுள்ளது. ரூ.425 கோடி செலவில் ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்கும் திட்டத்தை செயல்படுத்த இந்துஸ்தான் ஆயில் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

தமிழகத்தில் சுமார் 1,076 கி.மீ நீள கடற்கரை உள்ளது. 14 மாவட்டங்கள் கடல் தொழிலை சார்ந்து உள்ளன. அந்நிய செலாவணியை ஈட்டுவதில் மீன்பிடித்தொழில் முக்கிய தொழிலாக உள்ளது. இந்த திட்டம் செயலாக்கம் பெறும்போது, தமிழ்நாட்டு கடல் பகுதிகள் சர்வ நாசத்தை சந்திக்க நேரும். இதனால், கடலை நம்பி வாழும் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பது மாத்திரமல்ல, கடல் வாழ் உயிரினங்கள் அழிந்து போய்விடும். சுற்றுச் சூழலில் ஈடு செய்ய முடியாத பேரிழப்புகள் ஏற்படும். ஹைட்ரோ கார்பனை எடுப்பதற்கு மிகப் பெரிய துளைகள் போட்டுத்தான் எடுக்க முடியும். அவ்வாறு எடுக்கும் போது ஆபத்தான நச்சுத் தன்மையுள்ள ரசாயனப் பொருட்களை உள்ளே செலுத்தித் தான் அந்தப் பணிகள் நடக்கும். அத்துடன் பேரிரைச்சலோடு செயல்படுத்தப்படும் இந்த செயல்பாடுகளால் நில அதிர்வு ஏற்படும். இது அங்கே இருக்கக்கூடிய உயிரினங்களின் உயிர்களை காவு கேட்கும் என்பதில் சந்தேகமில்லை.தற்போது ஆரம்ப நிலையிலேயே ஆமைகள் அதிகமாக இறந்து கரை ஒதுங்கி வருகின்றன.

எனவேதான் கடலில் மேற்கொள்ளப்படும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் கடல் வளம் பாதிக்கப்படும் என சூழலியல் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. கடற் பகுதியில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்திற்கு முந்தைய திமுக அரசு அனுமதி மறுத்தது. அதனை கருத்தில் கொண்டு தற்போது தமிழ்நாடு அரசு கடலூர் மாவட்டம், பரங்கிப்பேட்டை கடற் பகுதியில் மட்டுமின்றி தமிழ்நாட்டின் எந்த கடற் பகுதியிலும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த அனுமதிக்க கூடாது என்று வலியுறுத்துகிறேன்.

ஜவாஹிருல்லா (மமக தலைவர்): பரங்கிப்பேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார கடற்பகுதிகள் சுற்றுச்சூழல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளாகும். அங்கு மேற்கொள்ளப்படும் ஹைட்ரோ கார்பன் திட்டங்கள் கடல் நீர் மாசுபாடு, உயிரியல் சமநிலை பாதிப்பு மற்றும் பாரம்பரிய மீன்பிடித் தொழிலுக்கு நீண்டகால ஆபத்தை உருவாக்கும். 2025ம் ஆண்டு இதே போன்ற முயற்சிகளுக்கு எதிராக திமுக அரசு எடுத்த நிலைப்பாடு மக்களால் வரவேற்கப்பட்டது. தற்போதைய அரசும் அதே உறுதியான நிலைப்பாட்டை தொடர வேண்டும். சுற்றுச்சூழல் பாதுகாப்பும், மீனவர்களின் வாழ்வாதார உரிமையும் எந்த நிறுவன நலனுக்கும் பலியாக்கப்படக் கூடாது. எனவே, பரங்கிப்பேட்டை கடற்பகுதியில் புதிய ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைப்பதற்கு தமிழ்நாடு அரசு எந்தவித அனுமதியும் வழங்கக் கூடாது.

முகமது முபாரக் (எஸ்டிபிஐ மாநில தலைவர்): ஏற்கனவே இப்பகுதியில் உள்ள எண்ணெய் கிணறுகளால் மீன் வளம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எச்சரித்து வருகின்றனர். இச்சூழலில், மீண்டும் புதிய கிணறுகளை அமைக்க முயல்வது கடலை மட்டுமே நம்பி வாழும் பல்லாயிரக்கணக்கான மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை முற்றிலும் சீரழித்துவிடும். மேலும், நாட்டின் முக்கிய தூணாக விளங்கும் மீன்பிடித்தொழிலையும், கடல்சார் பொருளாதாரத்தையும் இது பெருமளவில் பாதிக்கும். அத்துடன், கடலில் ஏற்படும் எண்ணெய் கசிவுகளால் கடல் நீர் கடுமையாக மாசடைந்து ஒட்டுமொத்த கடல் வளமும் சீர்குலையும் அபாயம் உள்ளது என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். எனவே, மீனவர்களின் வாழ்வாதாரத்தையும், இயற்கை வளத்தையும் பணயம் வைக்கும் இத்தகைய ஆபத்தான திட்டங்களுக்குக் கடலோர ஒழுங்குமுறை ஆணையம் எவ்வித அனுமதியும் அளிக்கக்கூடாது என ஒன்றிய, மாநில அரசுகளை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

Tags : Tamil Nadu government ,Chennai ,Vaiko ,MDMK ,General Secretary ,Parangipettai, Cuddalore district… ,
× RELATED 3 நாள் பயணத்தை முடித்துக் கொண்டு சென்னை திரும்பினார் முதல்வர் விஜய்