கூடலூர்: வண்டிப்பெரியாறு பகுதியில் 7 மாடுகளை கொன்ற புலியை பிடிக்க கேரள வனத்துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதற்காக 3 கூண்டு அமைத்து, 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கேரளம் மாநிலம், இடுக்கி மாவட்டம், மூணாறு அருகே, தலையாறு எஸ்டேட் உள்ளிட்ட பாம்பன் மலைப்பகுதிகளில் 18க்கும் மேற்பட்ட கால்நடைகளை அடித்துக் கொன்ற 5 வயது புலியை கேரள வனத்துறையினர் கூண்டு வைத்து பிடித்தனர். இந்த புலியை கடந்த ஏப்.2ல் தேக்கடியில் உள்ள பெரியாறு புலிகள் காப்பக அடர்வனப்பகுதியில் விடுவித்தனர். இங்கு விடுவிக்கப்பட்ட புலி கடந்த மே 14ம் தேதி வண்டிப்பெரியாறு அருகே உள்ள கிரான்பி பகுதியில் புகுந்து, சத்திரம் மற்றும் வள்ளக்கடவு பகுதியில் சுற்றித்திரிந்தது.
தற்போது அதே பகுதியில் உள்ள அரணக்கல் எஸ்டேட் பகுதியில் நடமாடி வருகிறது. கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் குடியிருப்பு மற்றும் எஸ்டேட் பகுதிகளில் திரிந்த புலி 7 மாடுகளை அடித்துக் கொன்றுள்ளது. இதனால், பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர். தொழிலாளர்கள் வேலைக்குச் செல்லவும், குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பவும் தயங்கி வருகின்றனர். இது குறித்து பொதுமக்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று, அரணக்கல் பகுதியில் திரியும் புலியை பிடிக்க கேரள வனத்துறை தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இது குறித்து கோட்டயம் வனப்பிரிவு அதிகாரி பிரபுல் அகர்வால் கூறுகையில், ‘புலியின் நடமாட்டத்தை கண்காணிக்க ரேடியோ காலர் பொருத்தப்பட்டுள்ளது.
இதுதவிர 20 கண்காணிப்பு கேமராக்கள், 3 கூண்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. புலி தற்போது தேயிலை தோட்டத்தில் பதுங்கி உள்ளது. அவ்வப்போது ரன்னி வனப்பகுதிக்குள் சென்று வருகிறது. அதிகமான புதர்கள் வளர்ந்திருப்பதால் அதனை கண்டறிவதில் சிரமம் உள்ளது. வனத்துறையினர் 24 மணி நேரமும் ரோந்து பணியில் ஈடுபட்டு, விஹெச் ஆன்டனா மூலம் புலியின் இருப்பிடத்தை கண்காணித்து வருகின்றனர். மேலும், டிரோன்களும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. தொடர் மழை, அடர்ந்த மூடுபனி கண்காணிப்பு பணிக்கு பெரும் சவாலாக உள்ளது. மேலும் மயக்க ஊசி செலுத்தி பிடிக்க கால்நடை மருத்துவ குழுவினரும் தயார் நிலையில் உள்ளனர். புதர்களை அகற்றினால் புலியின் இருப்பிடத்தை எளிதாக கண்டுபிடித்து விடலாம். இது குறித்து கலெக்டரிடம் ஆலோசனை நடத்தப்பட உள்ளது’ என்றார்.
