பாடாலூர்: பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகாவில் உள்ள சில கிரஷர்களில் அனுமதியின்றி எம்.சாண்ட் (மணல்) ஏற்றி செல்வதாக ஆர்டிஓ அனிதாவிற்கு தகவல் கிடைத்தது. அதன்படி இன்று அவர் ஆலத்தூர் தாலுகா பகுதியில் தீவிர ஆய்வு பணிகள் மேற்கொண்டார். இந்தநிலையில் ஆலத்தூர் தாலுகா நாட்டார்மங்கலம்- கூத்தனூர் செல்லும் சாலையில் உள்ள ஒரு கிரஷரில் எம்.சாண்ட் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று செட்டிகுளம் வழியாக செஞ்சேரி நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது செட்டிகுளம் பகுதியில் வாகன சோதனையில், ஈடுபட்டிருந்த பெரம்பலூர் ஆர்டிஓ அனிதா, திடீரென்று அந்த லாரியை வழிமறித்து, ஆய்வு செய்தார்.
அப்போது கிரஷர் நிறுவனங்களிலிருந்து கனிமங்களை உரிய நடைச்சீட்டு மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஆவணங்கள் எதுவும் இல்லை என்று தெரியவந்தது. இதையடுத்து கோபம் அடைந்த ஆர்டிஓ, உடனடியாக அந்த எம்.சாண்டுடன் லாரியை பறிமுதல் செய்தார். பின்னர் பாடாலூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது.
இது சம்பந்தமாக செட்டிகுளம் கிராம நிர்வாக அலுவலர் அசேன் பாட்ஷா கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் லாரியை ஓட்டி வந்தது குரும்பலூர் பாளையத்தை சேர்ந்த கணேசன் மகன் கார்த்திக் (28) என்பது தெரியவந்துள்ளது. லாரி டிரைவர் கார்த்திக்கிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
