திருச்செந்தூர்: திருச்செந்தூர் முருகன் கோயில் அருகே கடலில் ஜெல்லி மீன்கள் கரை ஒதுங்கியது. இதையடுத்து பக்தர்கள் பாதுகாப்பாக நீராடுமாறு அறிவுறுத்தப்பட்டது. அறுபடை வீடுகளில் 2ம் படைவீடான திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு வரும் பக்தர்கள் இங்குள்ள கடலில் புனித நீராடியும், கடலில் கால் நனைத்த பிறகும் தான் சுவாமி தரிசனம் செய்வது வழக்கமாகும். இதனால் அதிகாலை முதல் மாலை வரை கடற்கரையில் பக்தர்கள் கூட்டம் அதிகளவில் இருக்கும். கோடை காலத்தில் காலநிலை மாற்றத்தால் ஆழ்கடலில் காணப்படும் ஜெல்லி மீன்கள் அதிகளவில் கரை ஒதுங்கும்.
அவ்வாறு ஒதுங்கிய ஜெல்லி மீன்கள் கடலில் நீராடும் போது உடலில் பட்டால் ஊரலையும் ஏற்படுத்தும். இந்நிலையில் திருச்செந்தூர் கோயில் கடலில் பக்தர்கள் நீராடும் பகுதியில் நேற்று ஜெல்லி மீன்கள் கரை ஒதுங்கியது. ஜெல்லி மீன்கள் கடலில் நீராடும் பக்தர்களின் உடலில் பட்டவுடன் ஊறலை ஏற்படுத்தியது. இதையடுத்து கடற்கரை பாதுகாப்பு பணியாளர்கள் கரை ஒதுங்கிய மீன்களை அப்புறப்படுத்தினர். மேலும் பக்தர்கள் பாதுகாப்பாக புனித நீராடுமாறு ஒலிப்பெருக்கி மூலம் அறிவுறுத்தினர்.
