- பஞ்சமிர்தம்
- பழனி கோயில்
- பழனி
- தண்டாயுதபாணி சுவாமி கோயில்
- முருகப்பெருமன்
- மூன்றாம் படை
- பழனி, திண்டுக்கல் மாவட்டம்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
பழநி: ஆன்லைனில் தனியார் இணையதளங்கள் மூலம் பஞ்சாமிர்தம் விற்பனை செய்யப்படுவதில்லை என பழநி கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம், பழநியில் முருகப்பெருமானின் மூன்றாம் படை வீடான தண்டாயுதபாணி சுவாமி கோயில் உள்ளது. தமிழகத்தில் அதிக பக்தர்கள் வரும் கோயில்களில் முதன்மையானதாக இக்கோயில் திகழ்கிறது. இங்கு பக்தர்களுக்கு பிரசாதமாக பஞ்சாமிர்தம் விற்கப்படுகிறது. 500 கிராம் சீல்டு டின் ரூ.45க்கும், 500 கிராம் பெட்ஜார் ரூ.40க்கும், 200 கிராம் பெட் ஜார் ரூ.20க்கும் கோயில் நிர்வாகம் மூலம் நேரடியாக விற்பனை செய்யப்படுகிறது.
இதற்காக மலைக்கோயில், அடிவாரம் மற்றும் பஸ்நிலையம் உள்ளிட்ட இடங்களில் கோயில் நிர்வாகம் சார்பில் பஞ்சாமிர்த விற்பனை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதுதவிர, அறநிலையத்துறை இணையதளம் மூலம் முன்பதிவு செய்பவர்களுக்கு அஞ்சல்துறை மூலம் அனுப்பப்படுகிறது. இந்நிலையில், சில தனியார் விற்பனை இணையதளங்களில் பழநி கோயில் பஞ்சாமிர்தம் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்தது.
இது குறித்து பழநி கோயில் இணை ஆணையர் மாரிமுத்துவிடம் கேட்டபோது, ‘தனியார் விற்பனை நிலையங்களிலோ, மீசோ, அமேசான், பிளிப்கார்ட் உள்ளிட்ட தனியார் விற்பனை இணையதளங்கள் மூலமாகவோ கோயில் நிர்வாகம் சார்பில் பஞ்சாமிர்தம் விற்பனை செய்யப்படுவதில்லை. பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் இதுபோன்ற தனியார் விற்பனை மையங்களில் இருந்து பழநி கோயில் பஞ்சாமிர்தத்தை கூடுதல் விலைகொடுத்து வாங்கி ஏமாற வேண்டாம்’ என்றார்.
