×

பிரெஞ்ச் ஓபன் பட்டம்; முதல் கிராண்ட்ஸ்லாம் வென்றது என்னால் நம்ப முடியவில்லை: ஸ்வெரேவ் நெகிழ்ச்சி

 

பாரீஸ்: பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் போட்டியில், ஜெர்மனியின் ஸ்வெரேவ் சாம்பியன் பட்டம் வென்றார். கிராண்ட் ஸ்லாம் தொடர்களில் ஒன்றான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடர், பாரீஸ் நகரில் நடக்கிறது. உலகின் முன்னணி வீரர்கள் பங்கேற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில், நேற்று முன்தினம் இரவு உலகின் 2ம் நிலை வீரரான ஜெர்மனியின் 29 வயதான அலெக்சாண்டர் ஸ்வெரேவ்வும், 10ம் நிலை வீரரான இத்தாலியின் 24 வயதான பிளவியா கோபோலியும் மோதினர். மாலை 6.30 மணிக்கு இப்போட்டி துவங்கியது. முதல் செட்டில் ஸ்வெரேவ் அதிரடியாக ஆடி புள்ளிகளை குவித்தார். அந்த செட்டை 6-1 என கைப்பற்றினார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில். 2வது செட்டை கோபோலி 6-4 என கைப்பற்றி அசத்தினார். இதனால், ஆட்டத்தில் அனல் பறந்தது. 3வது செட்டை ஸ்வெரேவ் 6-4 என கைப்பற்ற, 4வது செட்டை கடும் போட்டிக்கிடையே 7-6 (7-5) என கோபோலி கைப்பற்றி பதிலடி கொடுத்தார்.

இதனால், கடைசி செட் ஆட்டத்தில் யார் பட்டம் வெல்வார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்தது. அந்த செட்டை 6-1 என ஸ்வெரேவ் கைப்பற்றி வெற்றி வாகை சூடினார். இப்போட்டி இரவு 11.15 மணி வரை சுமார் 4.45 மணி நேரம் நடந்தது. பிரெஞ்ச் ஓபன் பட்டத்தை முதல் கிராண்ட் ஸ்லாம் பட்டமாக ஸ்வெரேவ் வென்று சாதனை படைத்துள்ளார். அவருக்கு வெற்றி கோப்பை மற்றும் ரூ.31 கோடி பரிசுத்தொகை வழங்கப்பட்டது. வெற்றி குறித்து ஸ்வெரேவ் கூறுகையில், முதலில் நான் ஜெயித்துவிட்டேன் என்பதை என்னால் நம்பவே முடியவில்லை. எனது டென்னிஸ் வாழ்க்கையின் மிகம் கடினமான தருணங்களில் சிலவற்றை நான் இங்குதான் சந்தித்தேன். இங்கு 2024ல் இறுதிப்போட்டியில் தோற்றேன். 20 வயதில் ‘‘மாஸ்டர்ஸ் 1000’’ போட்டியில் பட்டம் வென்றேன். ஆனால் கிராண்ட்ஸ்லாமில் பட்டம் வெல்ல அதிக காலம் பிடித்தது. இனி என்ன நடந்தாலும் நான் எப்போதும் ஒரு கிராண்ட்ஸ்லாம் சாம்பியனாகவே இருப்பேன். அதை என்னிடமிருந்து யாராலும் பறிக்க முடியாது’’ என்றார்.

 

Tags : French Open ,Grand Slam ,Zverev ,Paris ,Germany ,
× RELATED சூர்யவன்ஷி மீது எதிர்பார்ப்புகளின்...