×

முதல் டெஸ்டில் இந்தியா 564 ரன் குவிப்பு; அறிமுக வீரர் சுதர் சுழலில் ஆப்கன் அணி தடுமாற்றம்

நியூ சண்டிகர்: முதல் டெஸ்டில் இந்திய அணி 564 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்த நிலையில், அறிமுக சுழற்பந்து வீச்சாளர் மனவ் சுதரின் சுழலை சமாளிக்க முடியாமல் ஆப்கன் அணி தடுமாறி வருகிறது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் அணி ஒரு டெஸ்ட், 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆட உள்ளது. இந்த அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட், நியூ சண்டிகரில் நேற்று முன்தினம் துவங்கியது. முதல் நாள் ஆட்ட முடியவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 368 ரன்கள் எடுத்திருந்தது. கேப்டன் சுப்மன் கில் 103, ரிஷப் பண்ட் 50 ரன்களுடன் களத்தில் இருந்தனர். நேற்று 2ம் நாள் ஆட்டத்தை தொடர்ந்த இந்திய அணி சீரான வேகத்தில் ரன்களை குவித்தது. 126 ரன் எடுத்த நிலையில் கில், முகமது சலீம் சபி பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து ரிஷப் பண்ட் 81 ரன், துருவ் ஜூரல்(20) ரன் எடுத்து அவுட் ஆயினர்.

தனது முதல் டெஸ்டில் களமிறங்கிய பவுலிங் ஆல்ரவுண்டரான மனவ் சுதர் அதிரடியாக ஆடி 2 பவுண்டரி, 2 சிக்சர்களுடன் 28 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 127 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 564 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியா தனது முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது. அதிரடியாக ஆடிய வாஷிங்டன் சுந்தர் 52, குல்தீப் யாதவ் 8 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். ஆப்கானிஸ்தான் அணி சார்பில் அதிகபட்சமாக முகமது சலீம் சபி 6 விக்கெட், ஷரிபி, ஷாகிதி தலா ஒரு விக்கெட் வீழ்த்தியிருந்தனர்.

பின்னர் தனது முதல் இன்னிங்சை துவக்கிய ஆப்கானிஸ்தான் அணி, அறிமுக வீரரான இடது கை சுழற்பந்து வீச்சாளர் மனவ் சுதரின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது. இவர் துவக்க வீரர் அப்துல் மாலிக்கை, தனது முதல் சர்வதேச விக்கெட்டாக வீழ்த்தினார். சீரான இடைவெளியில் விக்கெட் வீழ்ந்தவண்ணம் இருந்ததால், ஆப்கானிஸ்தான் தடுமாறியது. 5 விக்கெட் இழப்புக்கு 113 ரன் எடுத்திருந்த நிலையில் 2ம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. ரஹ்மத் ஷா 43, அப்சர் சசாய் 3 ரன்களுடன் களத்தில் இருந்தனர். தற்போதைய நிலவரப்படி இந்தியா 451 ரன் முன்னிலை பெற்றுள்ளது. இதனால் பாலோ ஆனை தவிர்க்க இன்றைய ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் போராடும் என எதிர்பார்க்கலாம். இந்திய அணி தரப்பில் மனவ் சுதர் 3, பிரசித் கிருஷ்ணா 2 விக்கெட் வீழ்த்தினர்.

முதல் ஓவரிலேயே விக்கெட்
இடது கை சுழற்பந்து வீச்சாளரான ஆல்ரவுண்டர் மனவ் சுதர், சண்டிகர் டெஸ்டில் இடம் பெற்றதன்மூலம் தனது முதல் சர்வதேச போட்டியில் களமிறங்கினார். இவர் ஆப்கனின் அப்துல் மாலிக் விக்கெட்டை தனது முதல் ஓவரிலேயே வீழ்த்தி அசத்தினார்.

Tags : India ,Afghanistan ,Sudhar ,New Chandigarh ,Manav Sudhar ,
× RELATED டோக்கியோவில் நடைபெற்ற WR மகளிர் செஸ்...