புதுடெல்லி: தெற்கு டெல்லியின் மாளவியா நகர் பகுதியில் உள்ள ஹோட்டலில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நைஜீரிய நாட்டைச் சேர்ந்த வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் இந்தத் துயரச் சம்பவத்தில் பலியானோரின் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
கடந்த புதன்கிழமை அதிகாலை ஹவுஸ் ராணி பகுதியில் உள்ள ‘ஃபிளரிஷ் ஸ்டேஸ் பி&பி’ என்ற விடுதியில் இந்தத் தீ விபத்து ஏற்பட்டது. இக்கோர விபத்தில் 16 வயது சிறுமி மற்றும் கிர்கிஸ்தான், நைஜீரியா, வங்கதேசம், ஈராக், காங்கோ, மொசாம்பிக், லைபீரியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டினர் உட்பட 21 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இந்நிலையில், டெல்லி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த வெளிநாட்டு வாலிபர் ஒருவர் நேற்று நள்ளிரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது. இதன் மூலம், சமீபத்திய ஆண்டுகளில் நாட்டின் தலைநகரில் நடந்த மிக மோசமான தீ விபத்துகளில் ஒன்றான இதில் பலி எண்ணிக்கை 22 ஆக அதிகரித்துள்ளது.
உயிரிழந்தவர் நைஜீரிய நாட்டைச் சேர்ந்த ‘ஒகாலே’ என அடையாளம் காணப்பட்டுள்ளார். தீ விபத்தில் கடுமையான தீக்காயங்களுக்கு உள்ளான அவர், முதலில் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவரது நிலைமை மிகவும் மோசமடைந்ததை அடுத்து, வேறு மருத்துவமனையின் தீக்காயப் பிரிவுக்கு மாற்றப்பட்டார்.
அங்கு அவருக்கு செயற்கை சுவாசக் கருவி பொருத்தப்பட்டு, மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாகக் கூறிய போலீசார், அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர்.
