- பிராக்னானந்தா
- 2026 நார்வே செஸ் தொடர் சாம்பியன்ஷிப்
- ஒஸ்லோ
- இந்தியா
- ஆர். பிரக்ஞானந்தா
- நார்வே செஸ் 2026 தொடர்
- ஓஸ்லோ, நார்வே…
ஓஸ்லோ: நார்வே செஸ் 2026 தொடரில் இந்தியாவின் இளம் கிராண்ட்மாஸ்டர் ஆர்.பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டம் வென்று புதிய வரலாற்று சாதனை படைத்துள்ளார். இத்தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். நார்வேயின் ஓஸ்லோ நகரில் நடைபெற்ற நார்வே செஸ் 2026 தொடரின் இறுதிச் சுற்றில், இந்தியாவின் 20 வயது பிரக்ஞானந்தா, ஜெர்மனியின் வின்சென்ட் கெய்மரை எதிர்கொண்டார். விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் கெய்மரை வீழ்த்திய பிரக்ஞானந்தா, சாம்பியன் பட்டத்தை வென்றார்.
இறுதிச் சுற்றுக்கு முன்னதாக பிரக்ஞானந்தா, வெஸ்லி சோ மற்றும் அலிரேசா பிரோஸ்ஜா ஆகிய மூவருக்கு இடையே சாம்பியன் பட்டத்திற்கான கடும் போட்டி நிலவியது. மற்றொரு போட்டியில் வெஸ்லி சோ, பிரோஸ்ஜாவை அர்மகெடான் முறையில் வீழ்த்தினார். ஆனால், பிரக்ஞானந்தா கிளாசிகல் முறையில் முழுப் புள்ளிகளைப் பெற்றதால் வெஸ்லி சோவால் அவரை முந்த முடியவில்லை. மற்றொரு போட்டியில் மேக்னஸ் கார்ல்சன், உலக சாம்பியன் டி.குகேஷை வீழ்த்தி 4-வது இடத்தைப் பிடித்தார்.
இந்த தொடரின் நடுப்பகுதியில் சில தோல்விகளால் பிரக்ஞானந்தா பின் தங்கியிருந்தார். ஆனால், அசத்தலாக மீண்டெழுந்த அவர், அலிரேசா பிரோஸ்ஜா, மேக்னஸ் கார்ல்சன் மற்றும் குகேஷ் என உலகின் முன்னணி வீரர்களுக்கு எதிராக தொடர்ச்சியாகக் கிளாசிகல் போட்டிகளில் வென்று இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார். குறிப்பாக, 9-வது சுற்றில் குகேஷுக்கு எதிராகப் பெற்ற வெற்றி அவருக்கு பெரும் திருப்புமுனையாக அமைந்தது.
இந்த தொடரில் உலகின் நம்பர் 1 வீரரான மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை கிளாசிகல் போட்டிகளில் பிரக்ஞானந்தா வீழ்த்தி அசத்தினார். இதன் மூலம், ஒரே தொடரில் கார்ல்சனை 2 முறை வீழ்த்திய இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்திற்குப் பிறகு, இரண்டாவது வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். மேலும், 2026ம் ஆண்டில் கார்ல்சனை 2 முறை வீழ்த்திய முதல் வீரரும் இவரே ஆவார். சென்னையைச் சேர்ந்த இளம் வீரரான பிரக்ஞானந்தா, ஏற்கனவே கேண்டிடேட்ஸ் தொடருக்குத் தகுதி பெற்று உலகின் முன்னணி வீரர்களில் ஒருவராகத் திகழ்கிறார். தற்போது நார்வே செஸ் சாம்பியன் பட்டத்தையும் தனது கணக்கில் சேர்த்து இந்திய செஸ் விளையாட்டின் புதிய பொற்காலத்தை அவர் உருவாக்கியுள்ளார்.
பிரதமர் மோடி வாழ்த்து
பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது: இந்த மகத்தான சாதனைக்காக பிரக்ஞானந்தாவிற்கு வாழ்த்துகள்.
இது உண்மையிலேயே அவரது தொடர்ச்சியான சிறப்பை எடுத்துக்காட்டும் ஒரு அற்புதமான மைல்கல். அவரது எதிர்கால முயற்சிகளுக்கு எனது நல்வாழ்த்துகள். என தெரிவித்துள்ளார்.
பிரக்ஞானந்தாவுக்கு முதல்வர் வாழ்த்து
சென்னை: நார்வே செஸ் 2026 தொடரில் கிராண்ட்மாஸ்டர் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவிற்கு முதல்வர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது சமூகவலைதளத்தில் பதிவிட்டிருப்பதாவது:
நார்வே தலைநகர் ஆஸ்லோவில் நடைபெற்ற நார்வே செஸ் 2026 தொடரில் அறிவார்ந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி, பட்டத்தை வென்ற முதல் இந்தியர் என்ற வரலாற்று சாதனையை படைத்திட்ட கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தாவுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். ஒரே தொடரில் நடப்பு சாம்பியன் மாக்னஸ் கார்ல்செனை 2 முறையும், 4 போட்டிகளில் தொடர்ந்து வெற்றியும் பெற்று சாதனை படைத்துள்ளார். தமிழ்நாட்டிற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்த்துள்ள கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தாவிற்கு புதிய சாதனைகளை படைத்திட எனது வாழ்த்துகள்.
