×

12ம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டு மையம்: கலெக்டர் அலுவலகத்தில் திறப்பு

நாகர்கோவில், ஜூன் 6 : குமரி மாவட்ட பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் நாகர்கோவிலில் கலெக்டர் அலுவலக கீழ்தளத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் உயர்கல்வி பயில்வதற்கான வழிகாட்டுதல்கள் வழங்க உயர்கல்வி வழிகாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தை கலெக்டர் பிரதாப் நேற்று திறந்து வைத்தார். பின்னர் அவர் கூறியதாவது : குமரி மாவட்டத்திற்குட்பட்ட அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் 12ம் வகுப்பு பயின்று, தேர்ச்சி பெற்ற மாணவ மாணவிகள் உயர்கல்வி பயில்வதற்கு எந்தெந்த பாடப்பிரிவுகளை தேர்வு செய்யலாம் என்பது குறித்து, தெளிவான முடிவுகளை அறிந்து கொள்ளும் வகையில் மாணவர்களுக்கு தேவையான வழிகாட்டுதல் வழங்கிட மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் உயர்கல்வி வழிகாட்டு மையம் தொடங்கப்பட்டுள்ளது. இவ் வழிகாட்டு மையம் தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும்.

குமரி மாவட்டத்தில் 12ம் வகுப்பு முடித்த மாணவர்கள் தாங்கள் சேர விரும்புகிற உயர் கல்வி பாடப்பிரிவுகள், சேர்க்கை விவரங்கள், கல்வி கட்டணங்கள், கல்வி கடன் உள்ளிட்டவைகள் குறித்த சந்தேகங்கள் ஏதேனும் இருப்பின் இவ்வழிகாட்டு மையத்திற்கு நேரடியாக வந்தோ, 9944445202, 948787131347 என்ற தொலைப்பேசி வாயிலாகவோ உரிய வழிகாட்டுதல்களை பெற்றுக் கொள்ளலாம். பொறியியல் படிப்புகள், மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த படிப்புகள், கலை மற்றும் அறிவியல் படிப்புகள், சட்ட படிப்புகள், தொழில்நுட்பம் சார்ந்த படிப்புகள், தொழில் பயிற்சி சார்ந்த படிப்புகள், ஊக்கத் தொகையுடன் கூடிய பட்டயப்படிப்புகள் முதலான படிப்புகளுக்கான வழிகாட்டுதல்கள் இம்மையத்தின் வழியாக வழங்கப்படுகின்றன. இம்மையமானது அக்டோபர் மாதம் வரை செயல்படும். பெற்றோர் தங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தினை கருத்தில் கொண்டு, சரியான கல்லூரி, பாடப்பிரிவுகள், கல்வி கட்டணங்கள் குறித்து தெளிவாக தெரிந்து கொண்டு, தங்கள் குழந்தைகளை உயர்கல்வியில் சேர்க்க இம்மையத்தினை அணுகலாம். இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில் உதவி ஆட்சியர் (பயிற்சி) மோனிகா, திறன் மேம்பாட்டு கழகம் உதவி இயக்குனர் லட்சுமி காந்தன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பள்ளி கல்வி ) சாரதா, அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Higher Education Guidance Center ,Nagercoil ,Collector's Office ,Kumari District School Education Department ,
× RELATED ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பஞ்சு மில்லில் பயங்கர தீ விபத்து