காங்கிரசின் பினாமி விஜய் கட்சி டாஸ்மாக் கடைகளில் மாமூல் வாங்கும் தவெக நிர்வாகிகள்: நயினார் சரமாரி குற்றச்சாட்டு

நெல்லை: காங்கிரசின் பினாமி கட்சி தவெக. டாஸ்மாக் கடைகளில் தவெக நிர்வாகிகள் மாமூல் வாங்க ஆரம்பித்து விட்டார்கள் என்று பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார். நெல்லையில் பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நேற்று அளித்த பேட்டி: முதல்வர் விஜய் தனது அரசை சிறுபான்மை அரசு என்று கூறுகிறார். எந்த அடிப்படையில் அதனை கூறுகிறார் என்று தெரியவில்லை. கடந்த 23 நாட்களில் 25 பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நடந்துள்ளன. கஞ்சா விற்பனை தடையின்றி நடந்து வருகிறது.

படுகொலை சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. பாலியல் குற்றங்கள் தவெகவினராலேயே அரங்கேறி வருகிறது. டாஸ்மாக் கடையில் த.வெ.க நிர்வாகிகள் மாமுல் வாங்க ஆரம்பித்து விட்டார்கள். முதல்வர் என்பவர் பொறுப்போடு பேச வேண்டும். எதிர்க்கட்சிகள் என்ற முறையில் அரசின் குறைகளை சுட்டிக்காட்டுவதற்கு அனைத்து கட்சியினருக்கும் உரிமை உள்ளது. அவர்கள் சொல்லும் கருத்துக்கு முதல்வர்வாயில் வந்து விடும் என்று பேசுகிறார். இதுபோன்ற வார்த்தைகளை முதல்வர் இனிமேலாவது தவிர்க்க வேண்டும்.

முதல்வர் தனக்கான பொறுப்பை உணர்ந்து நடந்து கொண்டதாக தெரியவில்லை. அவர் முதல்வர் ஆனது அவருக்கே ஆச்சரியமாக உள்ளது. மின்வாரிய தலைமை அலுவலகத்தில் ஹார்டுடிஸ்க் காணாமல் போயிருக்கிறது. அந்த ஒப்பந்தத்தில் 400 கோடி ரூபாய் வரை முறைகேடு நடந்துள்ளது. முதல்வர் பொறுப்பில் இருந்து விஜய் தவறி விட்டார். முதல்வர் விஜய்யின் தவெக, காங்கிரஸ் கட்சியின் பினாமியாக செயல்படுகிறது. இப்போது தமிழகத்தில் உருவாகி உள்ள இடைத்தேர்தல் சூழல் என்பது தேவையற்றது.

சட்டமன்ற தேர்தல் முடிந்து 20 நாட்களில் இடைத்தேர்தல் என்பது ஏற்க முடியாதது. தமிழகத்தில் குதிரை பேரம் நடந்து கொண்டு இருக்கிறது. தவெகவுக்கு ஆதரவு வழங்க பல கோடி ரூபாய் கைமாறி உள்ளது. அதிமுக அல்லது பாஜ உடன் திமுகவுக்கு உறவு என்ற கேள்வி எழ வேண்டிய அவசியம் இல்லை. வருகிற இடைத்தேர்தலில் பாஜ நிலைப்பாடு குறித்து அகில இந்திய தலைமை முடிவு எடுக்கும். நான் டெல்லி சென்று எங்கள் அகில இந்திய தலைவரை பார்த்தேன். ஒன்றிய அமைச்சராக நான் ஆவது பற்றி எனக்கு எதுவும் தெரியாது. இவ்வாறு அவர் கூறினார்.

* அண்ணாமலை ராஜினாமா கடிதம் என்னிடம் வரவில்லை
‘‘அண்ணாமலை எனது இனிய நண்பர். அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன். புதிய கட்சி தொடங்குவது குறித்து அவர் யாரிடமும் பேசவில்லை. நாங்களும் அவரிடம் பேசவில்லை. அவர் ராஜினாமா செய்ததற்கான எந்த கடிதமும் மாநிலத் தலைவர் என்ற முறையில் என்னிடம் தரவில்லை. எங்களுக்கு இதுவரை எந்த தகவலும் கிடைக்கவில்லை. எங்களுக்குள் எந்த கருத்து வேறுபாடும் இல்லை. தற்போது வரை கட்சி ரீதியாக, குடும்ப விஷயங்கள் மற்றும் வேறு சில விஷயங்களை பேசி இருக்கிறோம்’’ என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

Related Stories: