சென்னை: காலை உணவு திட்டத்தின் ஒப்பந்தம் முடிவடைந்த நிலையில் மேலும் 3 மாதம் ஒப்பந்தத்தை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் நகரப் பகுதிகளிலும், கிராமப் பகுதிகளிலும் பள்ளிக்கு செல்லக்கூடிய குழந்தைகள் காலையிலேயே புறப்பட்டு விடுவதால், பெரும்பாலான குழந்தைகள் காலை உணவு சாப்பிடுவது இல்லை என்ற தகவல் அரசுக்கு கிடைத்ததையடுத்து, கடந்த திமுக ஆட்சியில் 15.9.2022 அன்று மதுரை அரசு பள்ளியில் வரலாற்று சிறப்புமிக்க காலை உணவுத் திட்டத்தை அப்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
அதன்படி முதல் கட்டமாக 1,14,095 தொடக்க பள்ளி மாணவ – மாணவிகள் காலை உணவு திட்டத்தில் பயன் அடைந்தார்கள். பின்னர் இந்த திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டது. இந்த சூழ்நிலையில் கடந்த மாதம் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, முதல்வராக விஜய் பதவியேற்றார். இதையடுத்து காலை உணவு திட்டம் தொடருமா என்ற கேள்வி எழுந்தது.
ஆனால், விடுமுறை முடிந்து நேற்று பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், கடந்த திமுக ஆட்சியில் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடர்ந்தது. இதனால் மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிலையில் காலை உணவு திட்டத்தின் ஒப்பந்தம் முடிவடைந்த நிலையில் மேலும் 3 மாதம் ஒப்பந்தத்தை நீட்டித்து தமிழ்நாடு அரசு நேற்று உத்தரவிட்டுள்ளது. அதன்படி, அடுத்த 3 மாதத்துக்குள் புதிய டெண்டர்கள் கோரப்பட்டு புதிய ஒப்பந்ததாரர்கள் தேர்வு செய்யப்படும் என்றும் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
