புதுச்சேரியில் மகளிருக்கு மாதம் ரூ.2500 வழங்க துணை நிலை ஆளுநர் ஒப்புதல்!!

புதுச்சேரி: புதுச்சேரியில் குடும்பத் தலைவிகளுக்கு வழங்கப்படும் மகளிர் உதவித் தொகை ரூ. 2,500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் என்.ஆர். காங்கிரஸ் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி தொடர்ந்து இரண்டாவது முறையாக வெற்றி பெற்று, ஆட்சியைப் பிடித்துள்ளது. முதல்வராக என். ரங்கசாமி பொறுப்பேற்றுள்ள நிலையில், பாஜகவைச் சேர்ந்த நமச்சிவாயம் மற்றும் மல்லாடி கிருஷ்ணா ராவ் ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்றனர்.

என்.ஆர். காங்கிரஸின் தேர்தல் வாக்குறுதியாக புதுச்சேரியில் 21 முதல் 55 வயது வரையிலான, அரசின் இதர மாதாந்திர நிதியுதவிகள் எதையும் பெறாத வறுமைக்கோட்டுக்கு கீழுள்ள குடும்பத் தலைவிகளுக்கு வழங்கப்பட்டு வரும் மாத உதவித் தொகை ரூ. 1,000 -ல் இருந்து ரூ. 2,500 ஆக உயர்த்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.2,500 வழங்கும் திட்டத்தை துணை நிலை ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த நிலையில், வறுமைக்கோட்டுக்கு கீழுள்ள குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.2,500 வழங்கும் திட்டத்துக்கு துணை நிலை ஆளுநர் கைலாஷ்நாதன் ஒப்புதல் அளித்துள்ளார். மேலும், 64,450 குடும்பத் தலைவிகள் பயன்பெறும் இத்திட்டத்திற்கு ரூ.16.11 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தேர்தலுக்கு முன்பு அறிவிக்கப்பட்ட திட்டத்திற்கு தற்போது ஒப்புதல் தரப்பட்டுள்ளது.

Related Stories: