×

எம்கேபி. நகர் பகுதியில் மூதாட்டியிடம் செயின் பறித்து தப்பிய திருடனை பிடித்த டிராபிக் போலீசார்

 

பெரம்பூர்: சென்னை வியாசர்பாடி எஸ்.ஏ.காலனி 3வது தெருவை சேர்ந்தவர் சுந்தரி (68). இவர் கொரட்டூர் பகுதியில் வீட்டு வேலை செய்து வருகிறார். இன்று காலை 8 மணி அளவில் காவாங்கரை பகுதியில் உள்ள தனது மகன் பாலாஜி வீட்டில் இருந்து கிளம்பி வியாசர்பாடி அம்பேத்கர் கல்லூரி பேருந்து நிறுத்தத்தில் இறங்கி பின்னர் வியாசர்பாடி மூர்த்திங்கர் நகர் பகுதியில் உள்ள தனது தம்பி செல்வம் வீட்டுக்கு நடந்து சென்றுள்ளார். அப்போது எதிர் திசையில் வந்த நபர் ஒருவர் திடீரென சுந்தரி அணிந்திருந்த தங்க செயினை அறுத்துக் கொண்டு ஓடியுள்ளார். திருடன், திருடன் என்று சுந்தரி கூச்சல் போட்டதால் அங்கு போக்குவரத்து பணியில் இருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி, ஏட்டு செந்தில்குமார், போலீஸ்காரர் ஸ்ரீதர் ஆகியோர் விரட்டிச்சென்றுள்ளனர். அவர்களுடன் பொதுமக்கள் சிலரும் சென்றுள்ளனர்.

அந்த பகுதியில் சற்று தூரம் சென்றதும் மர்ம நபரை சுற்றிவளைத்து பிடித்து அவரிடம் இருந்து செயினை மீட்டனர். இதுபற்றி தகவல் கிடைத்ததும் எம்கேபி.நகர் போலீசார் வந்து அந்த நபரை மீட்டு காவல்நிலையம் அழைத்துச்சென்று விசாரித்தனர். இதில், அந்த நபர் ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த உபேஷ்குமார் (24) என்பதும் கடந்த 15 நாட்களுக்கு முன்புதான் சென்னைக்கு வந்து எருக்கஞ்சேரி பகுதியில் கூலிவேலை செய்து வந்துள்ளார். அந்த வேலை பிடிக்காததால் சொந்த ஊருக்கு செல்வதற்கு பணம் தேவைப்பட்டதால் திருட்டில் ஈடுபட்டுள்ளார். இவ்வாறு தெரியவந்துள்ளது.

Tags : MKB ,Nagar ,Perambur ,Sundari ,3rd Street, S.A. Colony, Vyasarpadi, Chennai ,Korattur ,Balaji ,Kavankarai ,
× RELATED அரசின் வளர்ச்சிப் பணிகளை...