மேட்டூர்: நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 5,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 4,000 கனஅடியில் இருந்து 5,000 கனஅடியாக அதிகரித்துள்ளது.
காவிரி நீர் பிடிப்பு பகுதிகளிலும், மேட்டூர் அணையின் நீர்ப் பிடிப்பு பகுதிகளிலும் கடந்த சில நாள்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் மேட்டூர் அணைக்கான நீர் வரத்தும் ஒரே நாளில் 2 மடங்காக உயர்ந்துள்ள காரணத்தால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
இதனிடையே மழை காரணமாக இன்று காலை மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு விநாடிக்கு 2,369 கன அடியிலிருந்து 4,312 கன அடியாக அதிகரித்துள்ளது அதிகாரிகள் தகவல் தெரிவித்து உள்ளனர். மேட்டூர் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவைவிட அணையிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவு குறைவாக இருப்பதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணை நீர்மட்டம் 79.26 அடியிலிருந்து 79.53 அடியாக உயர்ந்துள்ளது . நீர் இருப்பு 41.49 டிஎம்சி ஆக உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
