×

எம்பிபிஎஸ் படிப்பை முடிக்க 10 ஆண்டு கால அவகாசம்: தேசிய மருத்துவ ஆணையம் பரிந்துரை

புதுடெல்லி: எம்பிபிஸ் படிப்பை நிறைவு செய்ய 10 ஆண்டுகள் காலஅவகாசத்தை பரிந்துரைத்துள்ள தேசிய மருத்துவ ஆணையம்(என்எம்சி) இதற்காக மாணவர்கள், பொதுமக்களிடமிருந்து கருத்துகள், ஆட்சேபனைகளை கேட்டுள்ளது.  ஐந்தரை ஆண்டுகள் பயிலும் எம்பிபிஎஸ் படிப்பில் முதல் நான்கரை ஆண்டுகள் பாட வகுப்புகள், செயல்முறை வகுப்புகள் பயிற்றுவிக்கப்பட்டு, அதன் பின்னர், ஓராண்டு பயிற்சி மருத்துவராக பணியாற்றுவது கட்டாயமாக உள்ளது.

இது நிறைவுற்றதும் மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்து மருத்துவராக பணியாற்ற முடியும். ஐந்தரை ஆண்டு கால படிப்பாக இருந்தாலும், தேர்ச்சி பெறாதவர்கள் 9 ஆண்டுகள் வரை தேர்வுகளை மீண்டும் எழுத அனுமதி அளிக்கப்படுகிறது. அதாவது, எம்பிபிஎஸ் படிப்பில் சேரும் ஒருவர் அதிகபட்சமாக ஒன்பது ஆண்டுகளுக்குள் எம்பிபிஎஸ் படிப்பின்கீழுள்ள அனைத்து தாள்களிலும் தேர்ச்சி பெறுவதுடன், ஓராண்டு மருத்துவ பயிற்சியையும் நிறைவு செய்வது அவசியம்.

அதேபோல், முதலாமாண்டு தேர்வுகளை அதிகபட்சமாக நான்கு முறை எழுத வாய்ப்பு தரப்படுகிறது. இந்நிலையில் எம்பிபிஎஸ் படிப்பை நிறைவு செய்யும் காலஅவகாசத்தை 9 ஆண்டுகளிலிருந்து 10 ஆண்டுகளாக அதிகரிக்க தேசிய மருத்துவ ஆணையம் திட்டமிட்டுள்ளது. இதற்கான முன்மொழிவை அரசிதழிலும் வௌியிட்டது. புதிய முன்மொழிவுகள் குறித்து 30 நாள்களுக்குள் ஆட்சேபனைகள், கருத்துகளை அனுப்புமாறு தேசிய மருத்துவ ஆணையம் கேட்டு கொண்டுள்ளது.

Tags : National Medical Commission ,New Delhi ,NMC ,
× RELATED ஓட்டல் அதிபரை காதலித்து திருமணம்...