×

அபிஷேக் பானர்ஜியை தொடர்ந்து மேலும் ஒரு திரிணாமுல் எம்பி மண்டை உடைப்பு

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் அபிஷேக் பானர்ஜியை தொடர்ந்து மூத்த எம்பியான கல்யாண் பானர்ஜி மீது நேற்று பயங்கர தாக்குதல் நடந்தது. இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. மேற்கு வங்கம் சோனார்பூரில் தேர்தலுக்கு பிந்தைய வன்முறையில் பாதிக்கப்பட்ட கட்சி தொண்டரை சந்தித்து ஆறுதல் தெரிவிக்க சென்ற மம்தா பானர்ஜியின் மருமகன் அபிஷேக் பானர்ஜி எம்.பி பாஜவினரால் நேற்று முன்தினம் தாக்கப்பட்டார்.

இந்நிலையில், போலீசாரால் கைது செய்யப்பட்ட திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்களை விடுவிக்கக் கோரி கொல்கத்தா சண்டிதலா காவல் நிலையத்தில் மனு அளிக்க நேற்று கல்யாண் பானர்ஜி எம்.பி தலைமையில் கட்சியினர் திரண்டனர். அப்போது அங்கு நின்றிருந்த சிலர் கல்யாண் பானர்ஜியை நோக்கி கருப்பு கொடி காட்டியுள்ளனர். மேலும் கல்யாண் பானர்ஜியை திருடன் என்று கூறியுள்ளனர். அப்போது இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. அப்போது கல்யாண் பானர்ஜியின் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது.

கல்யாண் பானர்ஜி கூறுகையில்,போலீஸ் நிலையத்துக்கு வெளியே நின்றிருந்த போது பாஜ தொண்டர்கள் தலையில் தாக்கினர். போலீசார் முன்னிலையில் இது நடந்தது. இதில் தலையில் காயம் ஏற்பட்டு ரத்தம் வெளியேறியது என்றார்.  ஆனால் இந்த தாக்குதலுக்கும் தங்களுக்கும் தொடர்பு இல்லை என்று பாஜ கூறியுள்ளது. பாஜ தலைவர்கள் கூறுகையில் திரிணாமுல் காங்கிரஸ் மீது உள்ள வெறுப்பை தலைவர்கள் மீது மக்கள் வெளிக்காட்டுகின்றனர் என்று பாஜவினர் கூறினர்.

நேற்று முன்தினம் திரிணாமுல் எம்பி அபிஷேக் பானர்ஜி மீது தாக்குதல் நடந்தது. கற்கள், முட்டைகள் போன்றவற்றை வீசி அவர் மீது தாக்குதல் நடந்தது. இதை தொடர்ந்து கல்யாண் பானர்ஜி தாக்கப்பட்டுள்ளது மேற்கு வங்கத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே அபிஷேக் பானர்ஜி மீது நடந்த தாக்குதலில் 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

* மம்தாவுடன் ராகுல்காந்தி பேச்சு
மேற்கு வங்கம் சோனார்பூரில் பாஜவினரால் தாக்கப்பட்ட மம்தா பானர்ஜியின் மருமகன் அபிஷேக் பானர்ஜி எம்.பி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இதுகுறித்து மம்தா பானர்ஜி கூறுகையில், ஆட்சியில் இருப்பவர்கள் அபிஷேக் பானர்ஜிக்கு சிறந்த சிகிச்சை கிடைப்பதை விரும்பவில்லை. அவருக்கு சிகிச்சை அளிக்கக்கூடாது என்று டாக்டர்கள், மருத்துவமனை நிர்வாகிகள் மிரட்டப்படுகின்றனர்.

டாக்டர்களுக்கு அழுத்தம் கொடுக்கப்படுகிறது. என் கண் முன்னாலேயே காவல்துறையினர் மிரட்டினார்கள். மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். தேவை ஏற்பட்டால் அபிஷேக் பானர்ஜிக்கு ஐதராபாத் அல்லது வேறு ஏதாவது ஒரு இடத்தில் சிகிச்சை அளிப்பதற்கான ஏற்பாடுகளை செய்து தருவதாக கூறினார் என்றார்.

இதற்கிடையே,பெல் வியூ மருத்துவமனை வெளியிட்ட மருத்துவ குறிப்பில் 38 வயதான அபிஷேக் பானர்ஜிக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. அவரது மார்பில் ஏற்பட்ட சிராய்ப்பைத் தவிர வேறு கடுமையான உடல் காயம் எதுவும் இல்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

* எம்எல்ஏக்கள் கூட்டம் திடீர் ரத்து
திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் நேற்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் 60க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் வராததால் கூட்டம் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இது கட்சியில் ஏற்பட்டுள்ள பிளவை உணர்த்துவதாக அமைந்துள்ளது என்று தகவல்கள் வந்தன.

ஆனால் இதை மறுத்த கட்சியின் செய்தி தொடர்பாளர் குணால் கோஷ் கூறுகையில், அபிஷேக், கல்யாண் பானர்ஜி மீது நடந்த தாக்குதலை கண்டித்து போராட்டம் நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்ய எம்எல்ஏக்கள் அவர்களுடைய தொகுதிகளில் இருக்க வேண்டியுள்ளது. அதனால் தான் பல எம்எல்ஏக்கள் வரவில்லை. எம்எல்ஏக்கள் கூட்டம் இன்னொரு தேதியில் நடைபெறும் என்றார்.

Tags : Abhishek Banerjee ,Trinamool ,Kolkata ,Kalyan Banerjee ,West Bengal ,Sonarpur, West Bengal… ,
× RELATED ஓட்டல் அதிபரை காதலித்து திருமணம்...