- கர்நாடக
- மெகாடத்து அணை
- மெகாடட்டு
- கர்நாடக மாநில அரசு
- பாண்டியன்
- பொதுச்செயலர்
- தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்
- ஜுஜுவாடி
ஓசூர்: மேகதாதுவில் அணை கட்டும் விவகாரம் தொடர்பாக, கர்நாடக மாநில அரசை கண்டித்து, தமிழக விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் பாண்டியன் தலைமையில் 500க்கும் மேற்பட்ட விவசாயிகள், கர்நாடகாவிற்குள் நுழைய முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களை மாநில எல்லையான ஜூஜூவாடியில் போலீசார் தடுத்து நிறுத்தினர். கர்நாடக மாநிலத்தில், காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில், புதிய அணை கட்ட அம்மாநில அரசு முயற்சி செய்து வருகிறது.
மேகதாதுவில் அணை கட்டப்பட்டால், தமிழகத்திற்கான நீர்வரத்து அடியோடு குறைந்து, டெல்டா மாவட்டங்களில் பாசனம் பொய்த்து விடும் என்பதால், தமிழக விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆனால், மேகதாதுவில் கண்டிப்பாக அணையை கட்டியே தீருவோம் என்றும், அதனை தடுக்க தமிழக அரசுக்கு உரிமை இல்லை என்றும் கர்நாடக மாநில முன்னாள் துணை முதல்ரும், நாளை மறுதினம் முதல்வராக பொறுப்பேற்க உள்ளவருமான டி.கே.சிவக்குமார் உறுதியாக தெரிவித்து வருகிறார்.
இந்நிலையில், தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் பாண்டியன் தலைமையில், 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் நேற்று முன்தினம், தஞ்சாவூரில் இருந்து புறப்பட்டு, நேற்று காலை (ஞாயிற்றுக்கிழமை) ஓசூர் வந்தடைந்தனர். பின்னர், அங்கிருந்து கர்நாடகாவை நோக்கி அவர்கள் வாகனங்களில் அரசனட்டி பேருந்து நிலையம் வரை சென்றனர். தொடர்ந்து பேரணியாக இஎஸ்ஐ மருத்துவமனை வரை சென்று, அங்கிருந்து கர்நாடக மாநிலத்திற்குள் செல்ல முயன்றனர்.
அவர்களை கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்பி தங்கதுரை தலைமையில், 500க்கும் மேற்பட்ட போலீசார் இஎஸ்ஐ மருத்துவமனை உள்வட்டச் சாலை அருகே மாநில எல்லையான ஜூஜூவாடியில் தடுத்து நிறுத்தினர். இதனால், விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு, கர்நாடக மாநில அரசுக்கு எதிராக கோஷமிட்டனர். பின்னர், திடீரென தர்ணாவில் ஈடுபட்டனர். அப்போது, தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் பி.ஆர்.பாண்டியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கர்நாடகாவின் புதிய முதல்வராக பதவியேற்க உள்ள டி.கே.சிவக்குமார், அரசியல் ஆதாயத்திற்காக மேகதாது அணை விவகாரத்தை பேசி வருகிறார். இன மோதலை உண்டாக்கும் வகையில் பேசும் இவர் மீது, தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடர வேண்டும். மேகதாது விவகாரத்தில், தமிழக முதல்வர் விஜய், அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி, கருத்துக்கள் கேட்க வேண்டும். மேகதாதுவில் அணை கட்டினால் அது தமிழகத்திற்கு மட்டுமல்ல, கர்நாடக விவசாயிகளுக்கும் பாதிப்பாக அமையும்.
மேலும், கேஆர்எஸ் அணையிலும் தண்ணீரை தேக்கி வைக்க முடியாத நிலை ஏற்படும். இதனால் தான், டி.கே.சிவக்குமார் தமிழக அரசுக்கு சவால் விடும் வகையில் பேசுவதை வன்மையாக கண்டிக்கிறோம். மேலும், கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்ட முயன்றால், தமிழகத்தைச் சேர்ந்த அனைத்து விவசாயிகளும், டெல்லி பாராளுமன்றத்தை முற்றுகையிடுவோம். மேலும், மத்திய நீர்வள துறை அலுவலகத்தையும் நாங்கள் முற்றுகையிடுவோம்.
மேகதாது பகுதியில் அணை கட்டினால், தமிழகத்தில் சென்னை உள்பட 11 மாநகராட்சிகளை உள்ளடக்கிய 32 மாவட்டங்களில் வாழும் சுமார் 5 கோடி மக்கள் குடிநீர் ஆதாரம் பறிபோகும். அதே போல், 25 லட்சம் ஏக்கர் விளைநிலம் பாலைவனமாக மாறி விடும். புதிய அணை கட்டுவது தொடர்பாக, கர்நாடக மாநில அரசு, உச்சநீதிமன்றத்தில் போட்ட மறுசீராய்வு மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், புதிதாக பொறுப்பேற்க இருக்கும் அரசு, அந்த விவகாரத்தை மீண்டும் கையில் எடுத்துள்ளது.
இதை கண்டித்து இந்த முற்றுகை போராட்டம் நடைபெற்று வருகிறது. கர்நாடகா-தமிழக விவசாயிகள் விரைவில் ஒன்று கூட இருக்கிறோம். மேகதாது பகுதியில் அணை கட்டுவதை தவிர்த்து, ராசி மணல் பகுதியில் அணை கட்ட ஒட்டுமொத்த விவசாயிகளின் தீர்மானமாக நிறைவேற்றுவோம். இந்த தீர்மானத்தை உச்சநீதிமன்றத்திற்கும், ஒன்றிய அரசுக்கும் அனுப்பி வைப்போம். அதே போல், காவிரி மேலாண்மை வாரியத்திற்கும் அனுப்பி வைப்போம்.
கர்நாடகா அரசு கொடுத்துள்ள, தற்போது கட்டவுள்ள அணையின் வரைவு திட்டத்தை உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளது. இன்று ஜனநாயகத்தை கர்நாடக அரசு கேலிக்கூத்தாக மாற்றியுள்ளது. மத்தியில் ஆளும் மோடி அரசு, தமிழகத்தை பாலைவனமாக மற்றும் இந்த செயலை தடுத்து நிறுத்த வேண்டும் என மன்றாடி கேட்டுக் கொள்கிறோம். மேகதாதுவில் அணைகட்ட நாங்கள் விடவே மாட்டோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
* மேகதாது பகுதியில் அணை கட்டினால், தமிழகத்தில் சென்னை உள்பட 11 மாநகராட்சிகளை உள்ளடக்கிய 32 மாவட்டங்களில் சுமார் 5 கோடி மக்கள் குடிநீர் ஆதாரம் பறிபோகும்.
* 25 லட்சம் ஏக்கர் விளைநிலம் பாலைவனமாக மாறி விடும்.
