×

ஐபிஎல் இறுதிப் போட்டி: குஜராத் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது பெங்களூரு அணி..!

அகமதாபாத்: ஐபிஎல் பைனல் ஆட்டத்தில் கோஹ்லியின் அதிரடி ஆட்டம் கைகொடுக்க, ஆர்சிபி அணி 2வது முறையாக சாம்பியன் கோப்பையை கைப்பற்றி அசத்தியது. பேட்டிங்கில் சொதப்பிய குஜராத் அணி 2ம் இடத்துடன் திருப்தி அடைந்தது.ஐபிஎல் 19வது தொடரின் லீக் போட்டிகள் மார்ச் 28ல் துவங்கி மே 24 வரை நடந்தன. புள்ளி பட்டியலில் முதல் நான்கு இடங்களை பிடித்த ஆர்சிபி, குஜராத், சன்ரைசர்ஸ், ராஜஸ்தான் அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றன.

குவாலிபயர் 1ல் ஆர்சிபி அணி, குஜராத் அணியை வென்று பைனலுக்கு தகுதி பெற்றது. எலிமினேட்டர் சுற்றில் ராஜஸ்தான் அணி, சன்ரைசர்ஸ் அணியை வென்றது. குவாலிபயர் 2ல் குஜராத் அணி, ராஜஸ்தானை வென்று பைனலுக்கு தகுதி பெற்றது. நேற்றிரவு அகமதாபாத் தில் நடந்த பைனல் ஆட்டத்தில் ஆர்சிபி, குஜராத் அணிகள் மீண்டும் மோதின. டாஸ் வென்ற ஆர்சிபி, பவுலிங்கை தேர்வு செய்தது. குஜராத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக சாய் சுதர்சன், கேப்டன் கில் களமிறங்கினர்.

ஆர்சிபி வீரர்களின் பவுலிங்கின் வேகத்தில் குஜராத் அணி வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
ஸ்கோர் 22 ஆக இருந்தபோது கேப்டன் கில் ஹேசல்வுட் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்து சாய் சுதர்சன் 12 ரன்னில் புவனேஸ்வர் பந்து வீச்சில் கீப்பர் ஜித்தேஷ் சர்மாவிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.அடுத்து வந்த நிசாந்த் சந்து 20 ரன், ஜோஸ் பட்லர் 19 ரன், ராகுல் திவாட்டியா 7 ரன்னில் அவுட் ஆக குஜராத் அணி 16.1 ஓவரில் 115 ரன்னுக்குள் 6 விக்கெட் இழந்தது.

கடைசியாக வந்த ஜேசன் ஹோல்டர், ரஷித் கான் தலா 7 ரன்கள் அடித்து அவுட் ஆகினர். ஒரு புறம் விக்கெட் விழுந்தாலும் மறுபுறம் வாஷிங்டன் சுந்தர் நிலைத்து நின்று ஆடி 37 பந்தில் 5 பவுண்டரியுடன் அரை சதமடித்து அணிக்கு நம்பிக்கை அளித்தார். இறுதியாக 20 ஓவர் முடிவில் குஜராத் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்கள் எடுத்தது. அடுத்து 156 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் ஆர்சிபி களமிறங்கியது.

ஓபனராக இறங்கிய வெங்கடேஷ் அய்யர் 32 ரன், அடுத்து வந்த தேவ்தத் படிக்கல் 1 ரன், ரஜத் படிதர் 15 ரன், குருணல் பாண்டியா 1 ரன், டிம் டேவிட் 24 ரன்னில் ஆட்டமிழந்தனர். மறுபுறம் மற்றொரு ஓபனராக இறங்கிய விராட் கோலி நங்கூரம் போல் கடைசி வரை நிலைத்து நின்று ஆடி 42 பந்தில் 9 போர், 3 சிக்சுடன் 75 ரன்கள் குவித்து அணிக்கு வெற்றியை தேடி தந்தார்.

கடைசி பந்தில் சிக்சர் அடித்து வெற்றி இலக்கை தொட்டது ரசிகர்களை உற்சாகமடைய செய்தது. இறுதியில் ஆர்சிபி அணி 18 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 161 ரன்கள் குவித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் 2வது முறையாக மீண்டும் ஐபிஎல் கோப்பையை கைப்பற்றி சாம்பியன் ஆனது.

Tags : IPL ,BANGALORE ,GUJARAT ,Ahmedabad ,RCP ,Champions Cup ,Kohli ,SOTHAPPIYA GUJARAT ,IPL 19th series ,
× RELATED பள்ளி திறப்பை ஒட்டி வெளியூர்...