×

10 வயது சிறுமி பலாத்காரம் செய்து கொலை கோவை சிறையில் கொலையாளியை சரமாரியாக தாக்கிய சக கைதிகள்: மீண்டும் மருத்துவமனையில் அனுமதி

கோவை: கோவை சூலூரில் 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற கொலையாளி கார்த்தி மீது கோவை மத்திய சிறையில் சக கைதிகள் சரமாரியாக தாக்குதல் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  கோவை சூலூர் பள்ளப்பாளையத்தில் கடந்த 21ம் தேதி 10 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த பாலியல் கொலையை செய்த சிறுமியின் பக்கத்து வீட்டில் வசித்த கார்த்தி(33) மற்றும உடந்தையாக இருந்த நண்பர் மோகன்ராஜ்(30) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

இருவரும் ஜூன் 5ம் தேதி வரை நீதிமன்ற காவலில் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கடந்த 27ம் தேதி இருவர் மீதும் குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது. முன்னதாக, கார்த்தி போலீசாரிடம் தப்பிக்கையில், கை, கால் உடைந்து, கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிறை கைதிகள் வார்டில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் கடந்த 28ம் தேதி கார்த்தி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில், நேற்று மதியம் ஒரு மணியளவில் சிறை கைதிகளுக்கு மதிய உணவு அளிக்கப்பட்டது. அங்கு சாப்பிடுவதற்காக கார்த்தி சென்றுள்ளார். அப்போது, அவர் 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றவர் என சக கைதிகளுக்கு தெரியவந்தது. இதனால் அவரை பார்த்ததும் ஆத்திரமடைந்த 5 கைதிகள் சமையல் பரிமாறுவதற்காக வைக்கப்பட்டிருந்த கரண்டி, பாத்திரம் ஆகியவற்றை தூக்கி எறிந்து கார்த்தி மீது சரமாரியாக தாக்குதல் நடத்தினர்.

அப்போது ஒரு கைதி, சாப்பிடும் தட்டை வளைத்து ஆயுதமாக பயன்படுத்தி கார்த்தியை பலமாக தாக்கினார். இதில் அவருக்கு படுகாயம் ஏற்பட்டது. இந்த தாக்குதல் சம்பவத்தால் சிறையில் பதற்றம் ஏற்பட்டது. உடனடியாக சிறை காவலர்கள் மற்றும் வார்டன்கள் சண்டையை தடுத்து, காயமடைந்த கார்த்தியை மீட்டு போலீஸ் பாதுகாப்புடன் சிறை ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனையில் மீண்டும் அனுமதித்தனர்.

அங்கு கைதிகள் வார்டில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சிறைக்குள் பாலியல் பலாத்கார கொலை வழக்கில் கைதானவர், சக கைதிகளால் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags : Coimbatore ,Coimbatore Central Jail ,Karthi ,Sulur, Coimbatore ,Pallapalayam, Sulur, Coimbatore… ,
× RELATED முன்னேற்பாடு நடவடிக்கைகளில் கடும்...