×

டி.கே.சிவக்குமார் கர்நாடக முதல்வராவதால் நஷ்டத்தில் இருந்த ‘காபிடே’ நிறுவன பங்குகள் கிடுகிடு: அரசியல் திருப்பங்களால் வர்த்தகத்தில் மாற்றம்

 

பெங்களூரு: கர்நாடக அரசியல் மாற்றங்கள் காரணமாக காபிடே நிறுவன பங்குகளின் மதிப்பு பங்குச்சந்தையில் வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்துள்ளது. கடந்த 2019ம் ஆண்டு அதிக கடன் சுமை காரணமாக பிரபல ‘காபிடே’ நிறுவனத்தின் நிறுவனரான வி.ஜி.சித்தார்த்தன் தற்கொலை செய்து கொண்டார். அவரது மறைவுக்குப் பிறகு, கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணாவின் மகளும், சித்தார்த்தனின் மனைவியுமான மாளவிகா ஹெக்டே நிறுவனத்தின் பொறுப்புகளை ஏற்று நடத்தினார்.

தொடர்ந்து இவர்களது மகன் அமர்த்யா ஹெக்டேவுக்கும், கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் மகள் ஐஸ்வர்யாவுக்கும் திருமணம் நடைபெற்றது. கடந்த காலங்களில் கடுமையான நிதி நெருக்கடியில் தவித்து வந்த காபிடே நிறுவனம், கடந்த ஆண்டு இதே காலாண்டில் 33 கோடி ரூபாய் நஷ்டத்தை சந்தித்திருந்த நிலையில், இந்த ஆண்டு மார்ச் காலாண்டில் 280 கோடி ரூபாய் வருவாயுடன், 130 கோடி ரூபாய் நிகர லாபத்தை ஈட்டி மாபெரும் மீட்சியைப் பதிவு செய்தது.

இந்நிலையில், சித்தராமையா தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, அடுத்த முதல்வராக டி.கே.சிவக்குமார் பதவி ஏற்பது உறுதியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்த அரசியல் மாற்றத்தால் காபிடே நிறுவனத்திற்கு எதிர்காலத்தில் அரசியல் ரீதியாக பெரும் ஆதரவு கிடைக்கும் என்று முதலீட்டாளர்கள் கணித்ததால், பங்குச் சந்தையில் அதன் பங்குகளின் விலை ஒரே நாளில் 20 சதவீதம் வரை உயர்ந்து ‘அப்பர் சர்க்யூட்’ எல்லையை எட்டியது.

இதன் காரணமாக, நேற்றைய வர்த்தகத்தில் 32 ரூபாயாக இருந்த ஒரு பங்கின் விலை 34 ரூபாயாக உயர்ந்தது. சிவக்குமார் முதல்வராக பதவியேற்கும் நாளில் இந்த பங்குகளின் மதிப்பு மேலும் பல மடங்கு உயரும் என்பதால், சமூக வலைதளங்களில் ‘பணக்காரர் ஆக வேண்டுமானால் காபிடே பங்குகளை வாங்கி வையுங்கள்’ என்ற செய்திகள் தற்போது வேகமாக பரவி வருகின்றன.

Tags : D. K. ,KABIDE ,SHIVAKUMAR ,KARNATAKA ,Bangalore ,Khabiday ,Cabitay ,V. G. Siddharthan ,
× RELATED நகை வாங்குவதை தவிர்க்குமாறு மோடி...