×

கணவன், மனைவி சண்டையால் ஆதாரமற்ற குற்ற வழக்குகள் அதிகரிப்பு: உச்சநீதிமன்ற நீதிபதிகள் கவலை

புதுடெல்லி: டெல்லியை சேர்ந்த ஒருவருக்கு கடந்த 2008ம் ஆண்டு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு ஒரு மகன், மகள் பிறந்தனர். கருத்து வேறுபாடு காரணமாக கணவனும், மனைவியும் 3ஆண்டுகளில் பிரிந்து விட்டனர். இருவருக்கும் இடையே சட்ட போராட்டம் நடந்து வந்ததால் மகனும், மகளும் கணவனின் பராமரிப்பில் இருந்தனர். கடந்த 2024ல் அந்த பெண் 14 வயது மகளை தன்னுடைய பராமரிப்பில் எடுத்து கொண்டார். இதன் பின்னர் கணவனும், அவரது சகோதரரும் மகளை பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் அளித்தார்.

மேலும் கணவனின் சகோதரி சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்வார். மாமியார் சிறுமியை துன்புறுத்துவதாகவும் அவர் குற்றம் சாட்டியிருந்தார். இந்த வழக்கை உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.வி.நாகரத்னா மற்றும் உஜ்ஜல் புயான் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வந்தது. இந்த நிலையில் சிறுமியை தந்தையும் சித்தப்பாவும் பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்பட்ட புகாரை நீதிபதிகள் நேற்று ரத்து செய்து தீர்ப்பளித்தனர்.

நீதிபதிகள் கூறியதாவது: பாலியல் பலாத்கார புகார் குறித்து சமர்ப்பிக்கப்பட்ட ஆதாரங்களை ஆய்வு செய்த போது அவற்றில்,பெரும்பாலானவை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் ஆகும்.கணவன், மனைவிக்கு இடையேயான தகராறில் பகையை தீர்த்து கொள்வதற்கு ஆதாரமற்ற குற்றவியல் வழக்குகளை தாக்கல் செய்யும் போக்கு அதிகரித்து வருகிறது. நீதிமன்றங்கள் அவற்றை நுணுக்கமாக ஆராய வேண்டும்.

திருமண தகராறுகள் மற்றும் கணவன், மாமியார், மாமனாரால் பெண்கள் கடுமையாகப் பாதிக்கப்படும் பல நிகழ்வுகள் உள்ளன என்பதை நாங்கள் அறிவோம். இது போன்ற வழக்குகளில் நீதித்துறை கவனத்துடன் ஆய்வு செய்ய வேண்டும் என்று கூறினர்.

Tags : Supreme Court ,New Delhi ,Delhi ,
× RELATED ஜாமீன் வழக்கில் மறுநாளே உத்தரவு ஒத்தி...