×

அதிக இடங்களை கைப்பற்றி ஆளும் ஆம்ஆத்மி அபாரம்; பஞ்சாப் உள்ளாட்சி தேர்தலில் 4ம் இடத்திற்கு தள்ளப்பட்ட பாஜக: 2027 பேரவை தேர்தலுக்கு முன் எதிர்க்கட்சிகள் அதிர்ச்சி

 

சண்டிகர்: பஞ்சாப் நகராட்சி தேர்தலில் ஆளும் ஆம் ஆத்மி கட்சி அசுர பலத்துடன் பெரும்பான்மை வார்டுகளைக் கைப்பற்றி இமாலய வெற்றியைப் பெற்றுள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் மொத்தம் உள்ள 105 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில், 102 அமைப்புகளுக்கு கடந்த 26ம் தேதி தேர்தல் நடத்தப்பட்டது. இதில் 8 நகராட்சிகள், 75 நகராட்சி மன்றங்கள், 19 நகர பஞ்சாயத்துகள் ஆகியவை அடங்கும். இந்த தேர்தலில் மொத்தம் 63.94 சதவீதம் வாக்குகள் பதிவாகின. தேர்தல் தேதிக்கு முன்னதாகவே 80 வார்டுகளில் வேட்பாளர்கள் போட்டியின்றி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், மீதமுள்ள 1,977 வார்டுகளுக்கு விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடந்தது.

இந்நிலையில், நேற்று வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் ஆளும் ஆம் ஆத்மி கட்சி பெரும்பாலான வார்டுகளைக் கைப்பற்றியது. பஞ்சாப் மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்ட அதிகாரப்பூர்வ தகவலின்படி, மொத்தம் உள்ள வார்டுகளில் ஆம் ஆத்மி கட்சி 958 வார்டுகளில் வென்று சாதனை படைத்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக காங்கிரஸ் 397 வார்டுகளிலும், சுயேச்சைகள் 251 வார்டுகளிலும், சிரோமணி அகாலி தளம் 192 வார்டுகளிலும் வெற்றியைப் பெற்றுள்ளன. பாஜக 172 வார்டுகளிலும், பகுஜன் சமாஜ் கட்சி 7 வார்டுகளிலும் மட்டுமே வெற்றி பெற முடிந்தது.
இந்த தேர்தல் முடிவில் பாஜக 4ம் இடத்திற்கு தள்ளப்பட்டது.

இந்த தேர்தலில் மோகா, பர்னாலா, பதிண்டா மற்றும் படாலா ஆகிய முக்கிய மாநகராட்சிகளில் ஆம் ஆத்மி கட்சி அபார வெற்றியைப் பதிவு செய்ததுடன், மொகாலி மாநகராட்சியிலும் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. அதே நேரத்தில், கபுர்தலாவில் காங்கிரஸ் கட்சியும், பதான்கோட் மற்றும் அபோஹரில் பாஜகவும் தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்றுள்ளன. இந்த மகத்தான வெற்றி குறித்து அம்மாநில முதல்வர் பகவந்த் மான் கூறுகையில், ‘வளர்ச்சியை மையமாகக் கொண்ட எங்களது ஆட்சிக்கு மக்கள் அளித்துள்ள மிகப்பெரிய அங்கீகாரம் இது’ என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், இத்தேர்தல் செயல்பாட்டின் போது ஆளும் ஆம் ஆத்மி அரசு தனது அரசு இயந்திரங்களைத் தவறாகப் பயன்படுத்தியதாக காங்கிரஸ், சிரோமணி அகாலி தளம் மற்றும் பாஜக ஆகிய எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. எப்படியாகிலும் இந்த உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள், வரவிருக்கும் 2027ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலுக்கான முக்கிய அரசியல் திசைகாட்டியாகப் பார்க்கப்படுகிறது.

Tags : Aam Aadmi Party ,BJP ,Punjab ,2027 assembly elections ,Chandigarh ,municipal ,
× RELATED நகை வாங்குவதை தவிர்க்குமாறு மோடி...