திருவனந்தபுரம்: கொச்சியில் உள்ள சிஎம்ஆர்எல் என்ற தாது மணல் ஆலை நிறுவனத்திலிருந்து கேரள எதிர்க்கட்சித் தலைவர் பினராயி விஜயனின் மகள் வீணா விஜயன் முறைகேடாக ரூ. 2.78 கோடி பணம் வாங்கிய விவகாரம் தொடர்பாக அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. தீவிர மோசடி விசாரணை அலுவலகமும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ளது.
இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன் பினராயி விஜயனின் கண்ணூர் மற்றும் திருவனந்தபுரத்தில் உள்ள வீடுகள், கோழிக்கோட்டில் உள்ள வீணா விஜயனின் கணவரும், முன்னாள் அமைச்சருமான முகம்மது ரியாசின் வீடு உள்பட 12 இடங்களில் அதிரடி சோதனை நடத்தியது. இந்நிலையில் இந்த சோதனை குறித்த விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளன. ரூ.18.36 கோடி இருப்பு உள்ள 242 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டன.
இதில் வீணா விஜயனின் வங்கிக் கணக்கும் உள்ளது. வீணா விஜயனுக்கு எதிராக பல்வேறு முக்கிய ஆவணங்கள் அமலாக்கத்துறையிடம் சிக்கியிருப்பதாக கூறப்படுகிறது. கடந்த இரு தினங்களாக இந்த ஆவணங்களை அதிகாரிகள் பரிசோதித்து வருகின்றனர்.
இது தொடர்பாக விளக்கம் கேட்பதற்காக இன்னும் ஒரு சில தினங்களில் வீணா விஜயனுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்ப உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையே அமலாக்கத் துறையின் விசாரணையை நிறுத்தி வைக்கக் கோரி சிஎம்ஆர்எல் நிறுவனம் சார்பில் கேரள உயர்நீதிமன்றத்தின் டிவிஷன் பெஞ்சில் நேற்று ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
* அமலாக்கத் துறையை பாஜ அசிங்கமான வழியில் பயன்படுத்துகிறது
கேரள எதிர்க்கட்சித் தலைவர் பினராயி விஜயன் நேற்று திருவனந்தபுரத்தில் நிருபர்களிடம் கூறியது: என்னுடைய வீட்டில் சோதனைக்காக வந்த அமலாக்கத்துறை என்னிடம் எந்த விசாரணையும் நடத்தவில்லை. என்னுடைய மகளின் ஒரே ஒரு வங்கிக் கணக்கு மட்டும் தான் முடக்கப்பட்டுள்ளது. அமலாக்கத்துறையை பாஜ அசிங்கமான வழியில் பயன்படுத்துகிறது. என்னுடைய வீட்டில் சோதனை நடந்த போது எந்தப் பிரச்சனையும் ஏற்படக்கூடாது என்பதற்காகவே தலைவர்கள் முயற்சி எடுத்தனர். இவ்வாறு அவர் கூறினார்.
