நெல்லை அருகே 3 சிப்பிப்பாறை நாய்களுக்கு விஷம் வைத்து சாகடிப்பு: நெல்லை எஸ்பி அலுவலகத்திற்கு இறந்த நாயுடன் வந்த வாலிபர்

 

நெல்லை, மே 28: நெல்லை அருகே அண்டை வீட்டுக்காரர்களுடன் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக 3 சிப்பிப்பாறை நாய்களுக்கு உணவில் விஷம் வைத்து கொன்ற நிலையில் அது குறித்து சீதபற்பநல்லூர் போலீசில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் எஸ்பி அலுவலகத்திற்கு இறந்த நாயுடன் வாலிபர் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரை தேடி வருகின்றனர். நெல்லை மாவட்டம் உகந்தான்பட்டி, தெற்குத்தெருவைச் சேர்ந்தவர் துரை (42). கூலித்தொழிலாளியான இவர் தனது வீட்டு காவலுக்காக சிப்பிப்பாறை இனத்தை சேர்ந்த 3 நாய்கள் உட்பட 5 நாய்களை வளர்த்து வந்தார்.

இதில் சிப்பிப்பாறை நாய்கள் ஒவ்வொன்றும் சுமார் ரூ.20 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை மதிப்பு ஆகும். கடந்த 21ம் தேதி துரையின் நாய் பக்கத்து வீட்டை சேர்ந்த சுடலைக்குமார் என்பவர் வளர்க்கும் நாயை கடித்து விட்டது. இதுதொடர்பாக சுடலைக்குமார் தட்டிக்கேட்டதால் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்நிலையில் கடந்த 23ம் தேதி காலையில் துரை தனது 3 சிப்பிப்பாறை நாய்களை வீட்டின் பின்புறம் கட்டி வைத்து விட்டு வழக்கம் போல் வேலைக்கு சென்று விட்டார். மதியம் அவரது மனைவி அந்த நாய்களுக்கு உணவு வைத்துள்ளார். இரவு வேலை முடிந்து வீடு திரும்பிய துரை, நாய்களுக்கு உணவு கொடுக்க சென்ற போது 3 நாய்களும் மயங்கிய நிலையில் எழுந்திருக்க முடியாமல் கிடந்தன.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் நாய்களை மீட்டு கடங்கனேரியில் உள்ள ஒரு நாய் கிளினிக்கில் பரிசோதனை செய்தார். அப்போது யாரோ நாய்களுக்கு உணவில் விஷம் வைத்து விட்டதாக மருத்துவர் தெரிவித்தார். இதனை தொடர்ந்து அங்கு முதலுதவி முடிந்து மேல் சிகிச்சைக்காக ராமையன்பட்டியில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கு நாய்களை கொண்டு சென்றார். அங்கு சிகிச்சை பலனின்றி ஒரு நாய் பரிதாபமாக இறந்தது. மீதமுள்ள 2 நாய்களும் உயிருக்கு போராடின. இதுகுறித்து துரை சந்தேகத்தின் பேரில் சீதபற்பநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதற்கிடையே எஞ்சிய 2 நாய்களும் அடுத்தடுத்து உயிரிழந்தன.

ஆனால் போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் மெத்தனம் காட்டியதாக கூறப்படுகிறது. இதனால் நெல்லை மாவட்ட போலீஸ் எஸ்பி அலுவலகத்திற்கு ஆட்டோவில் இறந்த நாயின் உடலோடு நேரில் சென்று துரை புகார் மனு அளித்தார். அந்த மனுவை பரிசீலித்த எஸ்பி பிரசன்னகுமார் உடனடியாக இந்த விவகாரத்தில் தலையிட்டு நாய்களை கொன்ற நபர்கள் மீது கைது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். முன்னதாக இறந்த நாய்களில் ஒரு நாய்க்கு கால்நடை மருத்துவர்கள் பிரேத பரிசோதனை செய்தனர். அந்த பரிசோதனை முடிவில் நாய்களுக்கு விஷம் வைக்கப்பட்டது உறுதியானது.

அந்த மருத்துவ அறிக்கையையும் துரை, எஸ்பி அலுவலகத்தில் ஆதாரமாக சமர்ப்பித்தார். எஸ்பியின் அதிரடி உத்தரவை தொடர்ந்து சீதபற்பநல்லூர் போலீசார் தலைமறைவாக உள்ள அண்டை வீட்டு இளைஞர்கள் 3 பேரையும் தீவிரமாக தேடி வருகின்றனர். இதுகுறித்து நாயின் உரிமையாளர் துரை கூறுகையில், நாய் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து புகார் அளித்தும் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் இறந்து போன நாயுடன் எஸ்பி அலுவலகத்திற்கு வந்து புகார் அளித்தேன் என்றார்.

 

 

Related Stories: