சென்னை: இரட்டை நிலைப்பாட்டை ஒரு போதும் காங்கிரஸ் எடுக்க முடியாது, குதிரை பேர அரசியலை காங்கிரசில் யார் நியாயப்படுத்தினாலும் அது தவறு என்று மாணிக்கம் தாகூருக்கு ஜோதிமணி எம்பி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் எம்.பி.மாணிக்கம் தாகூர் ‘‘அதிமுக எம்எல்ஏக்கள் தங்கள் இடங்களை ராஜினாமா செய்து, வெளிப்படையாக தவெகவில் சேர்ந்திருக்கிறார்கள். இதில் ஏன் இவ்வளவு கதறல்’’ என்று குதிரை பேரத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் கூறியிருந்தார்.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் மற்றொரு எம்.பி.யான ஜோதிமணி, மாணிக்கம் தாகூருக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது: தமிழ்நாட்டு மக்களுக்கு ஒரு சிறப்பான ஆட்சியைத் தருவதற்கு ஒரு கூட்டணி கட்சியாக நிச்சயம் நாம் துணை நிற்போம். ஆனால் அதற்காக தவெக தேர்ந்தெடுக்கும் அனைத்து வழிமுறைகளையும் காங்கிரஸ் கட்சி ஆதரிக்க முடியாது. குதிரைபேர அரசியலை காங்கிரஸ் கட்சியில் இருந்து யார் நியாயப்படுத்தினாலும் அது தவறானது.
இந்தியாவில் ஜனநாயகத்தை, காங்கிரஸ் கட்சியைப் பலவீனப்படுத்த பாஜக முதலில் கையில் எடுத்த ஆயுதம் குதிரை பேரம். மக்கள் காங்கிரஸ் கட்சியை ஆட்சி செய்ய தேர்ந்தெடுத்த பல்வேறு மாநிலங்களில் பாஜக மக்கள் தீர்ப்பிற்கு எதிராக, குதிரை பேரத்தைப் பயன்படுத்தி காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்க முடியாமலும், அமைத்தாலும் ஆட்சியில் தொடர்ந்து நீடிக்க முடியாமலும் தடுத்து வருகிறது. தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி குதிரை பேரத்தை ஆதரிக்கும், தமிழ்நாட்டிற்கு வெளியே எதிர்க்கும் என்கிற இரட்டை நிலைப்பாட்டை காங்கிரஸ் கட்சி ஒருபோதும் எடுக்க முடியாது.
ஜனநாயகத்தை பலவீனப்படுத்தும் ஒரு சக்தியாக காங்கிரஸ் கட்சி செயல்பாடுமேயானால் அது காந்திக்கும், நேருவுக்கும், கொண்ட கொள்கைக்கும் செய்கிற வரலாற்றுத் துரோகமாக மாறிவிடும். தலைவர் ராகுல்காந்தி கொள்கைக்காக சமரசமற்றுப் போராடி வருகிற சூழலில் அந்தப் போராட்டத்தை பலவீனப்படுத்தும் முயற்சியில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் அதை ஏற்கமுடியாது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
