சிவகிரி: தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே தளவாய்புரத்தை சேர்ந்த விவசாயி அந்தோணிராஜூவை (63) இடப்பிரச்னை தொடர்பாக கடந்த 21ம் தேதி காவல் நிலையத்துக்கு அழைத்து இன்ஸ்பெக்டர் முரளிதரன் அவதூறாக பேசி தாக்கியதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த அவர் விஷம் குடித்தார். நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி கடந்த 24ம் தேதி அவர் உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து சிவகிரி இன்ஸ்பெக்டர் முரளிதரன், ரைட்டர் கனகராஜ், ஏட்டு முத்துகண்ணன் ஆகிய 3 பேர் மீது தற்கொலைக்கு தூண்டுவது உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இன்ஸ்பெக்டர் முரளிதரன் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். இருப்பினும் இன்ஸ்பெக்டர் முரளிதரன் உள்ளிட்ட 3 பேரின் சஸ்பெண்ட் உத்தரவை பார்த்த பிறகு தான் உடலை வாங்குவோம் என்று உறவினர்கள் கூறிவிட்டனர். இதையடுத்து இன்ஸ்பெக்டர் முரளிதரன், ரைட்டர் கனகராஜ், ஏட்டு முத்துக் கண்ணன் ஆகியோரை, நெல்லை சரக டிஐஜி தேஷ்முக் சஞ்சய் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.
