×

தமிழகத்தின் புதிய டிஜிபி யார்? 3 பேர் பட்டியலுக்கு ஒன்றிய அரசு ஒப்புதல்: டெல்லியில் நடந்த கூட்டத்தில் முடிவு

 

சென்னை: தமிழகத்தின் புதிய டிஜிபியை நியமனம் செய்வதற்கு 3 பேர் கொண்ட பட்டியலுக்கு ஒன்றிய உள்துறை அதிகாரிகள் நேற்று ஒப்புதல் அளித்தனர். தமிழகத்தில் டிஜிபியாக இருந்த சங்கர் ஜிவால் ஓய்வு பெற்றார். அதன்பின்னர் நிர்வாகப் பிரிவு டிஜிபி வெங்கட்ராமன், பொறுப்பு டிஜிபியாக நியமிக்கப்பட்டார். பின்னர், நிரந்தர டிஜிபியை நியமிக்க விரும்பிய தமிழக அரசு, 10 பேர் கொண்ட டிஜிபிக்களின் பட்டியலை ஒன்றிய அரசுக்கு அனுப்பியது. அதில் ராஜீவ்குமார், சந்தீப் ராய் ரத்தோர், வன்னியபெருமாள் ஆகியோரில் ஒருவரை டிஜிபியாக நியமிக்கும்படி ஒன்றிய அரசு, தமிழக அரசுக்கு அனுப்பி வைத்தது.

ஆனால் இந்தப் பட்டியலை தமிழக அரசு ஏற்கவில்லை. அதில் சந்தீப் ராய் ரத்தோர், வன்னியபெருமாள் ஆகியோருக்கு தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை சான்றிதழ் வழங்கவில்லை. இதனால் அவர்களது பெயரை மாற்றி விட்டு புதிய பட்டியலை அனுப்பும்படி கேட்டுக் கொண்டனர். அதைத் தொடர்ந்து மீண்டும் ஒன்றிய அரசு ஆலோசனை கூட்டம் நடைபெறும் என்று அறிவித்தது. ஆனால் கூட்டத்தை ஒன்றிய அரசு நடத்தவில்லை.

தேர்தல் நேரத்தில் சட்டம் ஒழுங்கு டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் நியமிக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து, ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. இந்தநிலையில், நேற்று டெல்லியில் புதிய டிஜிபியை தேர்வு செய்வதற்கான கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில் ஒன்றிய அரசு அதிகாரிகளுடன், தமிழக தலைமைச் செயலாளர் சாய்குமார், உள்துறைச் செயலாளர் மணிவாசன் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் ராஜீவ்குமார், சந்தீப் ராய் ரத்தோர், மகேஷ்குமார் அகர்வால் ஆகியோரது பெயர்கள் தேர்வு செய்யப்பட்டன. இந்தப் பட்டியல் தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அதில் ராஜீவ்குமார், சட்டம் ஒழுங்கு பணியில் குறைவான நாட்களே பணியாற்றியுள்ளதால், அவரது பெயர் பரிசீலனை செய்யப்படாது என்று கூறப்படுகிறது. இதனால் சந்தீப் ராய் ரத்தோர் அல்லது மகேஷ்குமார் அகர்வால் ஆகியோரில் ஒருவர் சட்டம் ஒழுங்கு டிஜிபியாக நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : DGP ,Tamil Nadu ,Union government ,Delhi ,Chennai ,Tamil ,Nadu ,Shankar Jiwal ,Administrative Division ,Venkatraman ,
× RELATED வேட்புமனுவில் சொத்து விவரங்களை...