- இந்தியா
- ஐக்கிய மாநிலங்கள்
- குவாட் கூட்டம்
- சீனா
- புது தில்லி
- வெளியுறவு அமைச்சர்களின் ஆலோசனை கூட்டம்
- குவாட்
- அமைப்பு
- ஆஸ்திரேலியா
- ஜப்பான்
- தில்லி
- மத்திய வெளியுறவு அமைச்சர்
- Jaisankar
- எங்களுக்கு
- வெளியுறவு அமைச்சர்
புதுடெல்லி: இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகள் இணைந்து உருவாக்கிய குவாட் அமைப்பின் வெளியுறவு அமைச்சர்கள் ஆலோசனை கூட்டம் டெல்லியில் நேற்று நடந்தது. ஒன்றிய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தலைமையில் நடந்த இந்த மாநாட்டில் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ, ஜப்பானின் டோஷிமிட்சு மொட்டேகி மற்றும் ஆஸ்திரேலியாவின் பென்னி வோங் ஆகியோர் பங்கேற்றனர். கடந்த 2024 செப்டம்ரில் இருந்து நடக்கும் 3வது சந்திப்பு கூட்டம் இது.
கூட்டத்தில் தொடக்க உரையாற்றிய அமைச்சர் ஜெய்சங்கர், இந்தோ-பசிபிக் பிராந்தியம் உலகளாவிய வளர்ச்சி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு ஊக்கமளிப்பதாக தொடர வேண்டும் என்றும் குவாட் அமைப்பானது கடல்சார் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் பிராந்தியத்தில் பொருளாதார வாய்ப்புகளை ஊக்குவிப்பதற்கும் இணைந்து செயல்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
இந்த கூட்டத்தின் இடையே, இந்தியா-அமெரிக்கா இடையே முக்கிய கனிமங்களின் சுரங்கம் மற்றும் பதப்படுத்துதல் விநியோகத்தை பாதுகாப்பான வரலாற்று சிறப்புமிக்க ஒப்பந்தம் கையெழுத்தானது. இது குறித்து அமைச்சர் ஜெய்சங்கர் கூறுகையில், ‘‘இது மிகவும் சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட முக்கியமான நடவடிக்கை.
இந்த ஒப்பந்தம் சுரங்கம், பதப்படுத்துதல், மறுசுழற்சி மற்றும் முதலீடுகள் உட்பட முக்கிய கனிமங்கள் மற்றும் அரிய வகை தனிமங்களின் முழு விநியோக சங்கிலி முழுவதும் நமது ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது’’ என்றார். உலகளவில் அரிய வகை தனிமங்களின் விநியோகத்தில் சீனாவின் ஏகபோக ஆதிக்கமும், ஏற்றுமதி கட்டுப்பாடுகளும் அதிகரித்து வரும் சூழலில், அதற்கு மாற்றாக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தம் தவிர குவாட் நாடுகள் இணைந்து பல்வேறு முக்கிய முடிவுகளையும் எடுத்துள்ளன. இந்தோ-பசிபிக் முழுவதும் கடல்சார் கண்காணிப்பு மற்றும் தகவல் பகிர்வை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட இந்தோ-பசிபிக் கடல்சார் கண்காணிப்பு ஒத்துழைப்பு திட்டம், பிராந்தியத்தில் உள்ள நாடுகளுக்கு ஏறக்குறைய நிகழ்நேர வணிக கடல்சார் தரவுகளை வழங்குவதற்காக இந்தோ-பசிபிக் கடல்சார் கள விழிப்புணர்வு திட்டத்தை விரிவுபடுத்துதல், எதிர்காலத்திற்கான குவாட் துறைமுகங்கள் கூட்டாண்மை, பிராந்தியத்தில் எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்தல், தீவிரவாதத்திற்கு எதிராக பூஜ்ஜிய சகிப்புத்தன்மை ஆகிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. எதிர்கால குவாட் துறைமுகங்கள் கூட்டாண்மை திட்டத்தின் கீழ் பசிபிக் தீவுகளில் உள்கட்டமைப்பு மேம்படுத்தப்படும். இத்திட்டத்தின் கீழ் முதல் முறையாக, குவாட் அமைப்பு பிஜி தீவுடன் இணைந்து அதன் துறைமுக உள்கட்டமைப்பை மேம்படுத்த உள்ளது.
* ஹார்முஸ் ஜலசந்தியை திறக்க வலியுறுத்தல்
குவாட் வெளியுறவு அமைச்சர்கள், ஹார்முஸ் ஜலசந்தி வழியாக உலகளாவிய வர்த்தகம் தடையின்றி நடைபெற வேண்டும் என அழைப்பு விடுத்தனர். அப்பகுதியில் வர்த்தகக் கப்பல்களுக்கு ஈரான் சுங்கக் கட்டணம் விதிப்பதைக் கண்டித்தனர். மேலும் கிழக்கு சீனக் கடல் மற்றும் தென் சீனக் கடலில் நிலவும் சூழல் குறித்து ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தினர். அங்கு எந்தவொரு ஸ்திரத்தன்மையை சீர்குலைக்கும் ஒருதலைப்பட்சமான நடவடிக்கைகளுக்கு வலுவான எதிர்ப்பை மீண்டும் உறுதி செய்வதாக சீனாவுக்கு மறைமுக செய்தி அனுப்பினர்.
