×

சட்டீஸ்கர் நிலக்கரி ஊழல் வழக்கில் இருந்து முன்னாள் அமைச்சரின் சகோதரர் உட்பட 4 பேர் விடுவிப்பு

 

புதுடெல்லி: சட்டீஸ்கரில் நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் இருந்து எஸ்கேஎஸ் இஸ்பாத் நிறுவனம், முன்னாள் அமைச்சர் உட்பட 4 பேரை நீதிமன்றம் விடுவித்து உத்தரவிட்டுள்ளது. சட்டீஸ்கரில் நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்தது தொடர்பாக சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தது.

நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டை பெறுவதற்காக நிகர மதிப்பு, நிலம், முதலீடு மற்றும் அனுமதிகள் குறித்து பல்வேறு பொய்யான தகவல்களை அளித்து மத்திய நிலக்கரி அமைச்சகத்தை ஏமாற்றும் நோக்கில் அவர்கள் ஒரு குற்றச்சதியில் ஈடுபட்டதாக எஸ்கேஎஸ் இஸ்பாட் நிறுவனர் உள்ளிட்டோர் மீது சிபிஐ குற்றம்சாட்டியிருந்தது.

இந்த வழக்கு விசாரணைகள் முடிந்து கடந்த 23ம் தேதி தீர்ப்பு அளிக்கப்பட்டது. இதில் இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 420ன் கீழ் தண்டிக்கப்படக்கூடிய மோசடி குற்றத்திற்கு தேவையான அத்தியாவசியக் கூறுகளான ஏமாற்றுதல், தூண்டுதல் , நேர்மையற்ற நோக்கம் அல்லது தவறான ஆதாயம் ஆகியவற்றில் எதையாவது உறுதியாக நிரூபிக்க பதிவேட்டில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஆதாரங்கள் போதுமானதாக இல்லை.

குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிப்பதில் அரசு தரப்பு தவறிவிட்டதாக தனது தீர்ப்பில் கூறிய சிறப்பு நீதிபதி, முன்னாள் அமைச்சர் சுபோத் காந்த் சஹாயின் சகோதரர் உட்பட நான்கு பேரையும், எஸ்கேஎஸ் இஸ்பாட் நிறுவனத்தையும் முறைகேடு வழக்கில் இருந்து விடுவித்து உத்தரவிட்டார்.

Tags : Chhattisgarh ,New Delhi ,SKS Ispat ,CBI ,
× RELATED பிரதமர் மோடி பதவியேற்று 12 ஆண்டு நிறைவடைந்தது: பாஜ தலைவர்கள் வாழ்த்து