சேலம்: நாடு முழுவதும் முக்கிய வழித்தடங்களில் இயங்கும் ரயில்களில் பயணிகள் கூட்டம் அதிகளவு இருந்து வருவதால், சிறப்பு ரயில்களை ரயில்வே நிர்வாகம் இயக்கி வருகிறது. இந்தவகையில், ஆந்திரா மாநிலம் ஐதராபாத்தில் இருந்து கேரளா மாநிலம் கொல்லத்திற்கு சேலம், ஈரோடு, திருப்பூர், போத்தனூர் வழியே வாராந்திர சிறப்பு ரயில் (07193, 07194), இருமார்க்கத்திலும் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயிலின் இயக்க காலம் நடப்பு மாதத்தோடு முடிவடைய இருந்தநிலையில், வரும் ஜூன் மாத இறுதி வரை நீட்டித்து ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதன்படி, ஐதராபாத்-கொல்லம் வாராந்திர சிறப்பு ரயில் (07193), வரும் 30ம் தேதி முதல் ஜூன் 27ம் தேதி வரை சனிக்கிழமை தோறும் (5 சேவை) இயக்கப்படுகிறது. ஐதராபாத்தில் இரவு 11.10 மணிக்கு புறப்பட்டு, செகந்திராபாத், குண்டூர், நெல்லூர், ரேணிகுண்டா, திருப்பதி, சித்தூர், காட்பாடி, ஜோலார்பேட்டை வழியே சேலத்திற்கு அடுத்தநாள் (ஞாயிற்றுக்கிழமை) இரவு 7.22 மணிக்கு வந்தடைகிறது. பிறகு ஈரோட்டிற்கு இரவு 8.20க்கும், திருப்பூருக்கு இரவு 9.13க்கும், போத்தனூருக்கு இரவு 10.12க்கும் சென்று, பாலக்காடு, திருச்சூர், எர்ணாகுளம் டவுன், கோட்டயம், திருவல்லா வழியே கொல்லத்திற்கு திங்கட்கிழமை காலை 7.10 மணிக்கு சென்றடைகிறது.
மறுமார்க்கத்தில், கொல்லம்-ஐதராபாத் வாராந்திர சிறப்பு ரயில் (07194), வரும் ஜூன் 1ம் தேதி முதல் 29ம் தேதி வரை திங்கட்கிழமை தோறும் (5 சேவை) இயக்கப்படுகிறது. கொல்லத்தில் காலை 10.45 மணிக்கு புறப்பட்டு, கோட்டயம், எர்ணாகுளம், பாலக்காடு வழியே போத்தனூருக்கு மாலை 6.20க்கும், திருப்பூருக்கு இரவு 7.18க்கும், ஈரோட்டிற்கு இரவு 8.20க்கும் வந்து, சேலத்திற்கு இரவு 9.27 மணிக்கு வந்தடைகிறது. பிறகு ஜோலார்பேட்ைட, காட்பாடி, திருப்பதி, செகந்திராபாத் வழியே ஐதராபாத்திற்கு அடுத்தநாள் (செவ்வாய்கிழமை) மாலை 5.30 மணிக்கு சென்றடைகிறது. இந்த சிறப்பு ரயில் சேவையை பயணிகள் பயன்படுத்திக் கொள்ள சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.
