ஏற்காடு கோடை விழாவில் படகு போட்டி திடீர் ரத்து: சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

ஏற்காடு: ஏற்காட்டில் 49வது கோடை விழா மற்றும் மலர் கண்காட்சியில், படகு போட்டி திடீரென ரத்து செய்யப்பட்டதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். சேலம் மாவட்டம், ஏற்காட்டில் 49வது கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி கடந்த 22ம் தேதி தொடங்கியது. வரும் 28ம் தேதி வரை 7 நாட்கள் நடக்கும் விழாவில், தோட்டக்கலைத்துறை சார்பில், அண்ணா பூங்காவில் 2 லட்சம் மலர்களைக் கொண்டு மலர் கண்காட்சி, பழக்கண்காட்சி மற்றும் காய்கறி கண்காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன.

விவசாயம் காப்போம் என்ற கருத்தினை மையமாக கொண்டு காளைமாடு, கன்றுக்குட்டியுடன் கறவை பசு, முயல், வாத்து, ஆடு, நாய், கோழி, சேவல் உள்ளிட்ட வடிவமைப்புகள், டெடி பியர், தேவதை, பரதநாட்டிய மங்கைகள், இரட்டை இதயம், மான் உருவம், பிறை நிலா, சிறகு கொண்ட இதயம் உள்ளிட்ட பல்வேறு வடிவமைப்புகள் வண்ண மலர்களைக் கொண்டு அமைக்கப்பட்டு உள்ளன. சுற்றுலாப்பயணிகளை ஈர்க்கும் வகையில், 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வண்ண மலர் தொட்டிகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

மேலும், இரவு நேரங்களில் கண்களை கவரும் வகையில், பூங்காவிற்குள் அலங்கார மின்விளக்கு தோரணங்கள் பொருத்தப்பட்டுள்ளன. கோடை விடுமுறை என்பதால், தமிழகம் மட்டுமின்றி, அண்டை மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் குழந்தைகளுடன் ஏற்காட்டிற்கு படையெடுத்து வருகின்றனர். சுற்றுலா பயணிகள் மலர் கண்காட்சியை பார்வையிட்டு, ஏரியில் உற்சாகமாக படகு சவாரி செய்து மகிழ்கின்றனர். மேலும், ஏரிப்பூங்கா, மான் பூங்கா, ரோஜா தோட்டம், தாவரவியல் பூங்கா, கிளியூர் நீர்வீழ்ச்சி, கரடியூர் வியூ பாயிண்ட், லேடீஸ் சீட், ஜென்ஸ் சீட், பக்கோடா பாயிண்ட், சேர்வராயன் கோயில் உள்ளிட்ட இடங்களுக்கு சென்று அழகை ரசித்து, புகைப்படம் எடுத்துச் செல்கின்றனர்.

இதனிடையே, கோடை விழாவை காண வரும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில், தினமும் பல்வேறு விளையாட்டு போட்டிகளும், கலைநிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வருகிறது. குழந்தைகளுக்கான இளம்தளிர் நடைப்போட்டி, நடைவண்டி போட்டி, உப்பு மூட்டை, தவழும் போட்டி, அடுப்பில்லா சமையல் போட்டி, நாய்கள் கண்காட்சி உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றது. ஆண்டுதோறும் கோடை விழாவில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் படகு போட்டி நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டு படகு போட்டி திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. ஏரியில் போதுமான தண்ணீர் இல்லையா? அல்லது வேறு காரணமா என தெரியவில்லை.

படகு போட்டி நடத்தப்படாததால், வெளியூர்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் பெரிதும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.முன்னதாக, கோடை விழா தொடங்கும் போது ஏற்காடு மலை பாதையில் நடக்கும் மலையேற்றமும் இந்த ஆண்டு நடைபெறவில்லை. இதனிடையே, நடப்பாண்டு பெயரளவுக்கு கோடை விழா நடைபெறுவதாகவும், கடந்த ஆண்டில் நடைபெற்ற பல கலைநிழ்ச்சிகள் தற்போது நடைபெறவில்லை என்றும் சுற்றுலா பயணிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

Related Stories: