×

தோழப்பன்பண்ணை குளத்தை ஆக்கிரமித்த அமலைச்செடிகள்

 

ஸ்ரீவைகுண்டம், மே 26: தோழப்பன்பண்ணையில் குளத்தை ஆக்கிரமித்து நீரோட்டத்திற்கு தடையை ஏற்படுத்தும் அமலைச் செடிகளால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாகவும், அதனை உடனடியாக அகற்ற வேண்டும் எனவும் பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர். தாமிரபரணி ஆற்றின் மருதூர் கீழக்கால் பாசனத்தின் மூலம் தோழப்பன்பண்ணை குளம், பத்மநாபமங்கலம் குளம், கீழகஸ்பா குளம், பேரூர் குளம், சிவகளை குளம், பெருங்குளம் குளம் என 10க்கும் மேற்பட்ட குளங்கள் மூலம் சுமார் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்நிலையில், மருதூர் கீழக்கால் பாசனத்தின் கடைமடை குளங்கள் வரை நீர் செல்ல முடியாத அளவிற்கு தோழப்பன்பண்ணை மற்றும் பத்மநாபமங்கலம் பகுதியில் அமலைச்செடிகள் மற்றும் நீர் செடிகள் ஆக்கிரமித்து நீரோட்டத்தை தடை செய்து வருகின்றன.

எனவே நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றிட வேண்டுமென இப்பகுதி பொதுமக்களும், விவசாயிகளும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். இக்கோரிக்கை குறித்து இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் கடந்த ஒரு வார காலமாக தோழப்பன்பண்ணை பகுதி குளத்தில் தண்ணீர் துர்நாற்றம் வீசுவதுடன் அங்கு குளிக்கும் போது அரிப்பு உள்ளிட்ட தோல் நோய்கள் ஏற்பட்டு வருவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக அமலைச்செடிகள் அதிகளவில் அடர்ந்து வளர்ந்துள்ள நிலையில் தண்ணீரில் கழிவு எண்ணெய் போன்ற திரவம் கலந்து நீரினை மாசுபடுத்தி வருகிறது.

இந்த தண்ணீரை தான் கால்நடைகள் குடிப்பதற்காக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. கடந்த சில நாட்களாக குளத்தில் மீன்களும் செத்து மிதக்கும் நிலையில் கால்நடைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டு விடக்கூடாது என விவசாயிகள் அச்சம் தெரிவித்துள்ளனர். எனவே அமலை மற்றும் நீர் செடிகளின் ஆக்கிரமிப்புகளை அகற்றி தடையின்றி தண்ணீர் செல்வதை உறுதிப்படுத்த வேண்டும். தண்ணீரில் கலந்து வரும் கழிவு எண்ணெய் குறித்து மாவட்ட நிர்வாகம் உரிய ஆய்வு செய்து தங்களது வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து தோழப்பன்பண்ணையை சேர்ந்த ஆறுமுகநயினார் கூறுகையில், ‘நீரோட்டத்திற்கு தடையை ஏற்படுத்தும் அமலைச்செடிகளை அகற்ற வேண்டுமென பலமுறை கோரிக்கை விடுத்தும். இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் கடந்த ஒரு வார காலமாக தண்ணீரில் கழிவு நீர் ஆயில் மிதந்து கலங்கலாக உள்ளது. இதனால் இங்கு குளிக்கும் பொதுமக்களுக்கு அரிப்பு ஏற்படுவதுடன் தண்ணீரை குடிக்கும் கால்நடைகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. எனவே நீர்நிலைகளில் ஆக்கிரமித்திருக்கும் அமலைச்செடிகளை உடனடியாக அகற்ற வேண்டும்’ என்றார்.

 

Tags : Thozhappanpannai ,Srivaikundam ,Thamirabarani river ,Thozhappanpannai… ,
× RELATED மணல் கடத்தலுக்கு உடந்தையாக இருந்ததாக 4 ஏட்டு ஆயுதப்படைக்கு மாற்றம்