×

தலைமை தேர்தல் அதிகாரியை முதல்வரின் செயலாளராக நியமித்ததில் தவறில்லை: கேரள முதல்வர் வி.டி.சதீசன் பேட்டி

 

திருவனந்தபுரம்: கேரள தலைமை தேர்தல் அதிகாரியாக இருந்த ரத்தன் யு. கேல்கர் கேரள முதல்வரின் செயலாளராக நியமிக்கப்பட்டார். இதற்கு கம்யூனிஸ்ட், பாஜ கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. மேற்கு வங்காளத்தில் தலைமை தேர்தல் அதிகாரியாக இருந்த மகேஷ் அகர்வாலை பாஜ அரசு தலைமைச் செயலாளராக நியமித்ததற்கு ராகுல் காந்தி கடும் எதிர்ப்பு தெரிவித்தார். ஆனால் தற்போது அதேபோல் கேரள தலைமை தேர்தல் அதிகாரியாக இருந்த ஒருவரை முதல்வரின் செயலாளராக நியமித்தது குறித்து ராகுல் காந்தி வாய் திறக்காதது ஏன் என்று கம்யூனிஸ்ட், பாஜ உள்ளிட்ட கட்சிகள் கேள்வி எழுப்பின.

இந்நிலையில் திருவனந்தபுரத்தில் நேற்று அமைச்சரவை கூட்டத்திற்குப் பின் முதல்வர் வி.டி. சதீசன் நிருபர்களிடம் கூறியது: தலைமை தேர்தல் அதிகாரியாக இருந்த ஒருவரை என்னுடைய செயலாளராக நியமித்ததில் எந்தத் தவறும் கிடையாது. கடந்த இடதுசாரி கூட்டணி அரசுதான் தலைமை தேர்தல் அதிகாரியாக நியமிக்க ரத்தன் கேல்கரை தேர்தல் ஆணையத்திற்கு சிபாரிசு செய்தது. கேரளத்தில் எஸ்ஐஆர் குறித்தோ சட்டப்பேரவை தேர்தலை நடத்தியது குறித்தோ எந்தக் கட்சிகளும் புகார் கூறவில்லை. ரத்தன் கேல்கர் கேரள மாநில பணியில் உள்ள ஒரு அதிகாரி ஆவார். தேர்தலை நடத்தி முடித்த கையோடு அவரது வேலை முடிந்துவிட்டது.

இதற்கு முன் கேரளத்தில் நளினி நெட்டோ தலைமை தேர்தல் அதிகாரியாக இருந்தார். அதன் பின்னர் கேரள உள்துறையிலும், தலைமைச் செயலாளராகவும், பின்னர் முதலமைச்சரின் அலுவலகத்திலும் பணிபுரிந்தார். தலைமை தேர்தல் அதிகாரியை என்னுடைய செயலாளராக நியமித்ததை மேற்கு வங்கத்துடன் ஒப்பிட வேண்டிய அவசியமில்லை. மேற்குவங்கத்தில் தலைமை தேர்தல் அதிகாரி மீது மிக மோசமான குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன. எஸ்ஐஆர் மூலம் பெருமளவு ஓட்டுகள் நீக்கப்பட்டன. தலைமை தேர்தல் அதிகாரி மீது எதிர்க்கட்சிகள் புகார் கூறின. அதுபோல இங்குள்ள அதிகாரி மீது யாரும் புகார் கூறவில்லை என்றார்.

Tags : Chief Electoral Officer ,Chief Minister's Secretary ,Kerala ,Chief Minister ,V.D. Satheesan ,Thiruvananthapuram ,Ratan U. Kelkar ,Chief Electoral Officer of ,Chief Minister of Kerala ,Communist ,BJP ,Mahesh Agarwal ,West Bengal ,BJP… ,
× RELATED டெல்லியில் நாளை காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம்