மதுரை மீனாட்சியம்மன் கோயில் அருகே பயங்கரம்: 23 இடங்களில் கத்தியால் குத்தி 17 வயது சிறுவன் கொடூர கொலை: அண்ணன், தம்பி உட்பட 5 பேர் கைது

 

மதுரை: மதுரையில் மீனாட்சி அம்மன் கோயில் அருகே நேற்று அதிகாலை முன்விரோதம் காரணமாக 17 வயது சிறுவனை, கும்பல் கத்தியால் 23 இடங்களில் சரமாரியாக குத்தி கொடூரமாக கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக அண்ணன், தம்பி உட்பட 5 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

மதுரை வடக்கு மாசி வீதியை சேர்ந்த அழகுராஜா மகன் குபேந்திரன் (17). இவருக்கும், மதுரை திடீர் நகரை சேர்ந்த முத்துமணி (எ) தொத்தல் மணி(28) என்பவருக்கும் இடையே, கடந்த ஏப்.26ம் தேதி, மதுரையில் நடந்த சித்திரை திருவிழாவின்போது தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரத்தில் குபேந்திரன் பாட்டிலை உடைத்து முத்துமணியின் காதில் குத்தியுள்ளார். இதில் படுகாயமடைந்த முத்துமணி அளித்த புகாரின்பேரில், மதுரை திலகர் திடல் காவல் நிலைய போலீசார் 4 பிரிவுகளின் கீழ் குபேந்திரன் மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வந்தனர். இதுதொடர்பாக குபேந்திரன், முத்துமணி இடையே முன்விரோதம் இருந்து வந்தது.

நேற்று அதிகாலை மதுரை பழைய சென்ட்ரல் மார்க்கெட் பகுதியில் உள்ள மீனாட்சி அம்மன் கோயில் கார் பார்க்கிங் வணிக வளாகத்தின் முதல் தளத்தில் குபேந்திரன் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு முத்துமணி, இவரது தம்பி ராஜ்(26), மேலவாசல் ராஜா மகன் சதீஷ்குமார் (எ) குட்டன் சதீஷ்(28), வடக்கு மாசி வீதியை சேர்ந்த கண்ணன் மகன் ஹரிகிருஷ்ணன்(19), திடீர் நகரை சேர்ந்த முத்துக்குமார்(19) ஆகியோர் வந்தனர்.

அப்போது ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த குபேந்திரனை எழுப்பி கத்தியால் தலை, வயிறு, நெஞ்சு, முதுகு உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக குத்தினர்.  இதில் குடல் வெளியே சரிந்து விழுந்துள்ளது. மொத்தம் 23 இடங்களில் குத்து விழுந்ததில் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே குபேந்திரன் உயிரிழந்தார்.

பின்னர் குபேந்திரனின் உடலை தரதரவென இழுத்து வந்து, முதல் தளத்திலிருந்து கீழே வீசிவிட்டு சென்று விட்டனர். இதுதொடர்பாக விளக்குத்தூண் போலீசார் வழக்குப்பதிந்து குற்றவாளிகளை தேடி வந்தனர். நேற்று மதியம் முத்துமணி (எ) தொத்தல் முத்துமணி, ராஜ், சதீஷ்குமார் (எ) குட்டன் சதீஷ், ஹரிகிருஷ்ணன், முத்துக்குமார் ஆகிய 5 பேரையும் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்களிடமிருந்து ஒரு கத்தி, 2 டூவீலர்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

முதல்வராக விஜய் பொறுப்பேற்ற பிறகு தமிழகம் முழுவதும் பல்வேறு கொலை குற்றங்கள், பாலியல் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. கோவை சிறுமி பலாத்கார கொலை பரபரப்பாகிக் கொண்டிருக்கும் சூழலில், மதுரை மீனாட்சியம்மன் கோயில் அருகிலேயே 17 வயது சிறுவன் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: