- எங்களுக்கு
- மாநில செயலாளர்
- ரூபியோ
- பிரதமர் மோடி
- புது தில்லி
- இந்தியா
- ஆஸ்திரேலியா
- ஜப்பான்
- தில்லி
- மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர்
- எஸ்.ஜெய்சங்கர்
- அமெரிக்க…
புதுடெல்லி: இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளை உள்ளடக்கிய குவாட் நாடுகளின் வௌியுறவு அமைச்சர்கள் பங்கேற்கும் கூட்டம் டெல்லியில் நாளை நடைபெற உள்ளது. இந்த மாநாட்டுக்கு ஒன்றிய வௌியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தலைமை தாங்குகிறார். இதில் அமெரிக்க வௌியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ , ஆஸ்திரேலிய வௌியுறவு அமைச்சர் பென்னி வோங்க், ஜப்பான் வௌியுறவு அமைச்சர் தோஷிமிடசு மோடேகி ஆகியோர் பங்கேற்கின்றனர்.
இந்நிலையில் அமெரிக்க வௌியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ 4 நாள் பயணமாக தனது மனைவி ஜேனட் டி ரூபியோவுடன் நேற்று இந்தியா வந்தார். கொல்கத்தா விமான நிலையத்தில் வந்திறங்கிய மார்கோ ரூபியோவை இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் செர்ஜியோ கேர் உற்சாகமாக வரவேற்றார்.
பின்னர் விமான நிலையத்தில் இருந்து அன்னை தெரசாவின் மிஷனரீஸ் ஆஃப் சாரிட்டி அமைப்பின் தலைமை அலுவலகத்துக்கு சென்றார். அங்கு மதர் ஹவுசில் சிலமணி நேரம் செலவிட்ட மார்கோ ரூபியோ, மிஷனரீஸ் ஆஃப் சாரிட்டியின் பொது செயலாளர் சிஸ்டர் கான்சென்டினாவை சந்தித்து பேசினார். பின்னர் கொல்கத்தாவின் புகழ்மிக்க விக்டோரியா நினைவகத்துக்கும் சென்று பார்வையிட்டு, அங்குள்ள அதிகாரிகளுடன் உரையாடினார்.
இதைத்தொடர்ந்து நேற்று மதியம் டெல்லி சென்ற மார்கே ரூபியோ பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். அப்போது இருநாடுகளிடையேயான உறவுகள், பாதுகாப்பு, வர்த்தகம், எரிசக்தி, தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் இருநாடுகளின் ஒத்துழைப்பு பற்றி இருவரும் ஆலோசனை நடத்தினர்.
மார்கோ ரூபியோவுடனான சந்திப்பு குறித்து பிரதமர் மோடி தன் எக்ஸ் பதிவில், “அமெரிக்க வௌியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோவை வரவேற்பதில் மகிழ்ச்சி. இருநாடுகளின் நீடித்த உறவில் முன்னேற்றம், பிராந்திய மற்றும் உலகளாவிய அமைதி மற்றும் பாதுகாப்பு தொடர்பான பிரச்னைகள் பற்றி இருவரும் விவாதித்தோம். உலக நலனுக்காக இந்தியாவும், அமெரிக்காவும் தொடர்ந்து நெருக்கமாக பணியாற்றும்” என குறிப்பிட்டுள்ளார்.
இந்த சந்திப்பின்போது விரைவில் வெள்ளை மாளிகைக்கு வருமாறு அதிபர் டிரம்ப் சார்பாக பிரதமர் மோடிக்கு ரூபியோ அழைப்பு விடுத்தார். இன்று ஒன்றிய வௌியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரையும் ரூபியோ சந்தித்து பேச உள்ளார். நாளை ஆக்ரா மற்றும் ஜெய்ப்பூருக்கு செல்ல உள்ளார். இந்த பயணத்தை முடித்து கொண்டு டெல்லி திரும்பும் மார்கோ ரூபியோ நாளை நடைபெற உள்ள குவாட் வௌியுறவு அமைச்சர்களின் கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளார்.
