×

கோவையில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம்: குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க அன்புமணி ராமதாஸ் மற்றும் டிடிவி தினகரன் வலியுறுத்தல்

சென்னை: கோவையில் 10 வயது சிறுமி கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர்.

சிறுமி கொலை வழக்கு சம்பந்தமாக அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள பதிவில்; “கோவை மாவட்டம் சூலூரை அடுத்த பள்ளப்பாளையம் பேரூராட்சியைச் சேர்ந்த 10 வயது சிறுமி அதே பகுதியைச் சேர்ந்தவர்களால் கடத்திச் செல்லப்பட்டு, பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்யப்பட்டிருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. சிறுமியை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

புதிதாக பொறுப்பேற்ற முதலமைச்சர் விஜய் தலைமையிலான த.வெ.க அரசு, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க சிங்கப் பெண் சிறப்புப் படை உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அத்துடன் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். கோவை சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்த கயவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி, தூக்கு தண்டனை வழங்கப்படுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்” என பதிவிட்டுள்ளார்.

சிறுமி கொலை வழக்கு சம்பந்தமாக டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள பதிவில்; “கோவை மாவட்டம் சூலூர் அருகே 10வயது சிறுமி கொடூரமான முறையில் படுகொலை – மனிதநேயமற்ற மிருகங்கள் மீது சமரசமற்ற முறையில் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் பகுதியில் தனது வீட்டிற்கு அருகே விளையாடிக் கொண்டிருந்த 10 வயது சிறுமி அதே பகுதியைச் சேர்ந்த சிலரால் கடத்திச் செல்லப்பட்டு கொடூரமான முறையில் படுகொலை செய்து குளக்கரையில் வீசப்பட்டிருப்பதாக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன.

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கும் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு பிரச்சினையாக மட்டுமல்லாமல் சமூகத்தின் அடிப்படை மனிதநேயத்தையே கேள்விக்குறியாக்கும் அவலநிலையை ஏற்படுத்தியுள்ளன.

எனவே,கொடூரமான முறையில் சிறுமியைக் கொலை செய்த மனிதநேயமற்ற மிருகங்களைக் கைது செய்து அவர்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, பெண்களின் பாதுகாப்பு விஷயத்தில் தனி கவனம் செலுத்தவேண்டும் என முதலமைச்சர் விஜயை வலியுறுத்துகிறேன்” என பதிவிட்டுள்ளார்.

Tags : Coimbatore ,Anbumani Ramadoss ,TTV Dinakaran ,Chennai ,PMK ,AMMK ,general secretary ,
× RELATED திருத்தணி – மின்வெட்டை கண்டித்து தவெக எம்.எல்.ஏ-வை முற்றுகையிட்ட மக்கள்