×

ஆய்வு நடத்தியும், அதிகாரிகளுக்கு அட்வைஸ் செய்தும் அத்துமீறுவதால் மக்கள் அதிருப்தி: சென்னை மாநகராட்சி மண்டல கூட்டத்தில் தவெகவினர் புகுந்து ரீல்ஸ் எடுத்து அட்டகாசம்

 

* மக்கள் பிரதிநிதிகளின் பணிகளை கையில் எடுத்ததால் வறுத்தெடுக்கும் சமூகவலைதள மீம்ஸ்கள்
* அரசு அலுவலகங்களுக்குள் புகுந்து தொடர்ந்து அடாவடியில் ஈடுபடும் அவலம்
* கேலிக்கூத்தாக மாறி வரும் அரசு நிர்வாகங்கள்

சென்னை: தவெக ஆட்சி அமைந்த நிலையில் அரசு அலுவலகங்களுக்குள் புகுந்து தவெகவினர் ஆய்வு நடத்தியும், அதிகாரிகளுக்கு அட்வைஸ் செய்தும் அத்துமீறி வரும் செயல் பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ள நிலையில் அரசு நிர்வாகங்கள் கேலிக்கூத்தாக மாறி உள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளது. தமிழக சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் வென்று ஆட்சியைப் பிடித்துள்ளது. அக்கட்சி தலைவர் விஜய் முதல்வராக பொறுப்பேற்றுள்ளார். அவருடன் சேர்த்து இதுவரை 35 பேர் அமைச்சர்களாக பதவி ஏற்றுள்ளனர். ஆட்சி அமைத்த நிலையில், தவெகவினர் தமிழ்நாட்டில் நடத்தும் அலப்பறைகள் எல்லை மீறி சென்று கொண்டிருக்கிறது.

தவெகவினர் என்ற ஒன்றை வைத்துக் கொண்டு மக்கள் பிரதிநிதிகள் செய்ய வேண்டிய வேலைகளை இவர்களே செய்ய தொடங்கியிருப்பது கேலிக் கூத்தாக உள்ளது. எம்எல்ஏக்கள் செய்ய வேண்டிய பணிகளை தவெகவினர் என்ற பெயரில் அரசு அலுவலகங்களில் புகுந்து ஆய்வு நடத்த வந்துள்ளோம் என்று வாக்குவாதம் செய்வதை பார்த்தால் சிரிப்பதா அல்லது அவர்களை கண்டிப்பதா என தெரியாமல் தமிழ்நாடே தற்போது விழிபிதுங்கி நிற்கிறது. தவெகவினரின் சமீபத்திய நிகழ்வுகளை பார்த்தால், ‘குழந்தைகளை காரில் அமர வைத்தால் ஸ்டீரியங்கை திருப்பி விளையாடுவது’ போன்று இவர்களின் செயல்கள் உள்ளதாக விமர்சிக்கப்படுகிறது.

குறிப்பாக, அரசு அலுவலகங்கள் மற்றும் மருத்துவமனைகளில் ஆய்வு என்ற பெயரில் தவெகவினர் அத்துமீறி வருவதாக புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளது. ஓரிடத்தில் பிரச்னை என்றால் சம்பந்தப்பட்ட மாவட்ட எம்எல்ஏ., அமைச்சர்கள், மேயர், ஆட்சியர், அரசு அதிகாரிகள் என ஆய்வு மேற்கொள்ள இத்தனை பேர் உள்ளனர். ஆனால் நாங்களும் அந்த பணிகளை செய்வோம் என்று ஒவ்வொரு மாவட்டத்திலும் தவெகவினர் கிளம்பி இருப்பதை பார்க்கும் போது தமிழ்நாடு அரசையே கேலிக் கூத்தாக்கியுள்ளது. ஆர்வ மிகுதியில் சிலர் செய்யும் தவறுகள் முதல்வர் விஜய்யை தான் பாதிக்கும் என்பதை அவர்கள் சிந்திக்க வேண்டும்.

குறிப்பாக, தென்காசி மாவட்டத்தில் அரசு மருத்துவமனையில் தவெக மருத்துவரணி என்ற பெயரில் டாக்டர்களுக்கான கோட்டை போட்டுக்கொண்டு சிலர் ஆய்வு செய்ததும், கன்னியாகுமரியில் பேரூராட்சி அலுவலகத்தில் சென்று தவெகவினர் அத்துமீறி ஆவணங்களை எடுத்ததும் காவல் நிலையம் வரை புகார் சென்றுள்ளது. அடுத்ததாக, அணைக்கட்டு அரசு மருத்துவமனைக்குள் தவெக மாவட்ட செயலாளர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கும்பலாக அத்துமீறி நுழைந்து, “நான் அமைச்சர் அதிகாரத்திற்கு உரியவன்” என கூறி அதிகாரிகளை மிரட்டியதாக சர்ச்சைகள் எழுந்தன. அதேபோன்று, கிருஷ்ணகிரி மற்றும் பிற பகுதிகளில் நடந்த தவெக கொடியேற்று விழாக்கள் மற்றும் பொது நிகழ்ச்சிகளில் தொண்டர்கள் சிலர் வரம்பு மீறி நடந்து கொண்ட காட்சிகள் இணையத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தின.

மேலும், பாரம்பரிய திருவிழாக்களில் தவெகவினர் கொடியை வைத்துக்கொண்டு செய்த அலப்பறைகள் தொடர்பான வீடியோக்களும் ஊடகங்களில் பரவலாகப் பேசப்பட்டன. அதோடு விடவில்லை, துணை சபாநாயகராக தேர்வு செய்யப்பட்ட ரவிசங்கர் தான் பதவி ஏற்ற பின்பு தலைமை செயலகத்தில் உள்ள தனது அறைக்கு சென்றார். அப்போது அவரது நண்பர்கள், துணை சபாநாயகரின் இருக்கை எவ்வளவு பாரம்பரியமிக்கது என்பதை கூட அறியாதவர்களாக அதன் மீது உட்கார்ந்து ரீல்ஸ் எடுத்து வெளியிட்டதும் கடும் கண்டனத்துக்குள்ளாகியது. இவ்வாறு தவெக நிர்வாகிகள் சிலர் கட்சியின் பெயரையும், தங்களின் புதிய பதவிகளையும் தவறாகப் பயன்படுத்தி அரசு அதிகாரிகளை மிரட்டுவதும், பொதுமக்களுக்கு இடையூறு செய்வதும் விமர்சனத்திற்குள்ளாகி வருகிறது.

ஆட்சிக்கு வந்து சில வாரங்கள் மட்டுமே நிறைவடைந்த நிலையில் தொண்டர்களின் அடாவடிக்கு முதல்வர் விஜய் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்ற விமர்சனங்கள் சமூக வலைதளங்களில் கொடிகட்டி பறக்க தொடங்கியுள்ளது. இதன் எதிரொலியாக, தமிழக வெற்றி கழக (தவெக) தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் எல்லை மீறி நடந்து கொள்ளும் சில சம்பவங்கள் சமூக வலைத்தளங்களில் ‘அலப்பறை’ என விமர்சிக்கப்பட்டு வைரலாகி வருகின்றன. இந்நிலையில், அரசு விவகாரங்களில் தவெகவினர் தலையிடக்கூடாது என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அதிரடி உத்தரவு பிறப்பித்தார். ஆனால் அவரது அறிவுரைகளை எந்த ஒரு தவெகவினரும் கண்டுகொள்ளவில்லை என்பதை இன்னொரு சம்பவமும் உறுதிபடுத்தியுள்ளது.

அதாவது, சென்னை மாநகராட்சி சோழிங்கநல்லூர் 15வது மண்டலக்குழு அலுவலகத்தில் நேற்று முன்தினம் மாதாந்திர கூட்டம் நடைபெற்றது. இதுபோன்ற மாதாந்திர கூட்டத்தில் மண்டலக்குழு தலைவர், மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் துறை சார்ந்த சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கலந்துகொள்வது வழக்கம். எந்த ஒரு அரசியல் கட்சியினரும் கூட்டத்தில் கலந்துகொள்வதற்கு அனுமதி இல்லாத நிலையில், இந்த கூட்டத்தில் சோழிங்கநல்லூர் எம்எல்ஏ பி.சரவணமூர்த்தி கலந்து கொண்டார். அவருடன் சேர்ந்து தவெக கட்சியினர், கூட்டம் நடைபெறும் அரங்கிற்குள் உள்ளே புகுந்து ரீல்ஸ் எடுக்கும் பணியில் ஈடுபட்டனர். அதேபோல் தவெக கட்சியை சேர்ந்த ஒருவர் மைக்கில் சோழிங்கநல்லூர் தொகுதி முழுவதும் உள்ள சென்னை மாநகராட்சி அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.

அரசு அதிகாரிகள், மாமன்ற உறுப்பினர்களுக்குள் நடைபெறும் கூட்டத்தில் தவெகவினர் சுமார் 20க்கும் மேற்பட்டோர் அனுமதியின்றி உள்ளே புகுந்து நாற்காலியில் அமர்ந்து கொண்டு அதிகாரிகள் போன்று அதிகாரம் செய்தனர். எம்எல்ஏ ஒருவர் மண்டலக்குழு கூட்டத்திற்குள் தனது ஆதரவாளர்களை அழைத்து சென்றதும், அதிகாரிகள் நாற்காலியில் அமர்ந்து கொண்டு அதிகாரம் செய்ததும் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் மத்தியில் முகம் சுளிப்பை ஏற்படுத்தியது. அரசு நிர்வாகத்தில் தவெக கட்சியினரின் இந்த தலையீடு மற்றும் அத்துமீறல்கள் பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

தற்போது தவெகவினர் தங்களை எம்எல்ஏக்களாகவே நினைத்துக் கொண்டு ஆய்வில் இறங்கியுள்ளனர். இன்னும் முதல்வரின் பணிகளையும் அடுத்த சில நாட்களில் செய்வதற்கு தவெகவினர் தயங்க மாட்டார்கள் என்ற கேலி கிண்டல் இணைதள மீம்ஸ்கள் வைரலாகி வருகிறது. ஆட்சிக்கு வந்து ஒரு சில வாரம் மட்டுமே நிறைவடைந்த நிலையில் தொண்டர்களின் அடாவடிக்கு முதல்வர் விஜய் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதே பலரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

காற்றில் பறந்த புஸ்ஸி உத்தரவு
தவெகவினரின் அத்துமீறல்களுக்கு முடிவு கட்டும் வகையில், அரசு விவகாரங்களில் தவெகவினர் தலையிடக் கூடாது என்றும், தவெகவினர் தங்களுடைய எல்லை என்ன என்பதை அறிந்து செயல்பட வேண்டும் என்றும் மக்கள் பிரதிநிதிகள் அல்லாதோர் அரசு சார்ந்த விவகாரங்களில் தலையிடவோ, ஆய்வுகளை மேற்கொள்ளவோ கூடாது என தவெக பொதுச்செயலாளரும், அமைச்சருமான புஸ்ஸி ஆனந்த் உத்தரவிட்டார். இவ்வளவு களேபரத்துக்கு இடையில் அவர் உத்தரவு போட்ட அடுத்த சில நிமிடங்களில் அந்த உத்தரவை மீறி கோவை பகுதியில் தவெக எம்எல்ஏ ஒருவர் அதிகாரிகளை தனது வீட்டிற்கு வரவழைத்து ஆலோசனை கூட்டம் நடத்தியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Thavekas ,Chennai Corporation Zonal Meeting ,Chennai ,
× RELATED தவெக வேட்பாளரை தாக்கியதாக புகார்:...