* ஆய்வின்போதே ஒரு மணி நேரம் ‘பவர் கட்’
சோழவந்தான்: தவெக எம்எல்ஏவிடம் தொடர் மின்தடை குறித்து காரசாரமாக அக்கட்சியினரே வாக்குவாதம் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது. மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே மேலக்கால் ஊராட்சி அலுவலகத்தில் தவெக எம்எல்ஏ கருப்பையா நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கிருந்த மக்கள், குடிநீர் தட்டுப்பாடு மற்றும் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது என புகார் கூறினர். இதைக் கேட்டதும் எம்எல்ஏ, மின்சார வாரிய அதிகாரிகளை தொடர்பு கொண்டு மின்தடை குறித்து விளக்கம் கேட்டார். அப்போது அலுவலகத்திலும் மின்தடை ஏற்பட்டது.
சுமார் ஒருமணி நேரத்திற்கும் மேலாகியும் மின்சாரம் வராததால், வேறு வழியின்றி அலுவலகத்தை விட்டு வெளியில் வந்த எம்எல்ஏ, மரத்தடியில் சேர் போட்டு உட்கார்ந்து மின்வாரிய அலுவலர்கள் மற்றும் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளை வரவழைத்து மின்தடை உள்ளிட்ட பொதுமக்களின் குறைகளை உடனடியாக சரி செய்யுங்கள் என அறிவுறுத்தினார். அப்போது அங்கிருந்த தவெகவினர், அதிகாரிகளை சரமாரியாக குற்றம்சாட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ‘மின்தடை நேரத்தில் அதிகாரிகளை தொடர்பு கொண்டால் முறையாக பதில் கூறுவதில்லை.
இப்போது எம்எல்ஏ ஆய்வின்போதும் ஒரு மணி நேரத்திற்கு மேல் மின்சாரம் இல்லை. இதனால் அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுகிறது’ என்றனர். அப்போது கீழமட்டையான் கிராமத்தைச் சேர்ந்த தவெக நிர்வாகி, ”எங்கள் ஊரில் உங்களுக்கு நான்தான் அதிக வாக்குகள் வாங்கி கொடுத்தேன். வாக்களித்தவர்கள் என்னைத்தான் கேள்வி கேட்கின்றனர்” என எம்எல்ஏவிடம் ஆவேசமாக வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அரசு அதிகாரிகள் மீது தவெக கட்சியினரே, அடுத்தடுத்து குற்றச்சாட்டுகளை கூறியதால் சலசலப்பு ஏற்பட்டது.
