×

சவுதி புரோ லீக் கால்பந்து: அல் நஸர் சாம்பியன்: 2 கோல் போட்டு ரொனால்டோ அசத்தல்

 

ரியாத்: சவுதி புரோ லீக் கால்பந்து போட்டியில் போர்ச்சுகலை சேர்ந்த கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ அடித்த 2 கோல்கள் உதவியுடன் அபார வெற்றி பெற்ற அல் நஸர் அணி, சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றுள்ளது. சவுதி புரோ லீக் கால்பந்து போட்டிகள் சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் நடந்து வந்தன. இதில் போர்ச்சுகல் நாட்டை சேர்ந்த கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ தலைமையிலான அல் நஸர் அணி, 33 போட்டிகளில் ஆடி 27ல் வென்று முதலிடத்தில் இருந்தது.

இந்நிலையில் தனது கடைசி போட்டியில் அல் நஸர் அணி டமாக் அணியுடன் மோதியது. போட்டியின் துவக்கம் முதல் ஆக்ரோஷ ஆட்டத்தை வெளிப்படுத்திய அல் நஸர் அணியின் வீரர்கள் சீரான இடைவெளியில் கோல்கள் போட்டு அசத்தினர். அந்த அணியின் சாடியோ மானே 33வது நிமிடத்தில் முதல் கோல் போட்டார். அதைத் தொடர்ந்து கிங்ஸ்லி கோமன் 51வது நிமிடத்தில் அணியின் 2வது கோல் போட்டார். 57வது நிமிடத்தில் டமாக் அணிக்கு கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி அந்த அணியின் மோர்லே சில்லா அட்டகாசமாக கோல் போட்டார்.

இருப்பினும், கடைசி கட்டத்தில் அல் நஸர் கேப்டன் ரொனால்டோ, 62 மற்றும் 80வது நிமிடங்களில் அடுத்தடுத்து இரு கோல்கள் போட்டார். அதனால், 4-1 என்ற கோல் கணக்கில் அல் நஸர் அணி அபார வெற்றி பெற்றது. இத்துடன் சேர்ந்து, 28 வெற்றிகளுடன் 86 புள்ளிகள் பெற்ற அல் நஸர் முதலிடம் பிடித்து சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. அல் ஹிலால் அணி 84 புள்ளிகளுடன் 2ம் இடம் பிடித்தது.

Tags : Saudi Pro League ,Al Nassr ,Ronaldo ,Riyadh ,Cristiano Ronaldo ,Saudi Pro League… ,
× RELATED ஐபிஎல் 2026: பெங்களூரு அணிக்கு எதிரான...