×

குஜராத்துக்கு எதிராக படுதோல்வி; தொடர்ந்து 3வது ஆண்டாக சிஎஸ்கே ஏமாற்றம்; இளம் வீரர்களை கொண்டு அணியை கட்டமைப்பது எளிதல்ல: கேப்டன் ருதுராஜ் வேதனை

 

அகமதாபாத்: ஐபிஎல் நடப்பு சீசனில் நேற்று இரவு நடந்த லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. இதில் குஜராத் அணி 89 ரன்கள் வித்தியாசத்தில் சிஎஸ்கேவை வீழ்த்தியது. இதன் மூலம் தோல்வியுடன் ஐபிஎல் தொடரிலிருந்து சிஎஸ்கே வெளியேறியது. முதலில் பேட்டிங் ஆடிய குஜராத் அணியில் கேப்டன் கில் 64, சாய் சுதர்சன் 84 ரன்கள் குவித்து முதல் விக்கெட்டுக்கு 125 ரன்கள் குவித்தனர். தொடர்ந்து அதிரடியாக பேட்டிங் ஆடிய பட்லர் 27 பந்துகளில் 57 ரன்கள் குவிக்க குஜராத் அணி 20 ஓவர் முடிவில் 229 ரன்கள் குவித்தது. இதையடுத்து 230 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி ஆடிய சிஎஸ்கே அணி, ரபாடா, சிராஜ், ரஷித் பவுலிங்கில் துவம்சம் ஆனது. இறுதியாக 13.4 ஓவர்கள் மட்டுமே தாக்குபிடித்த சிஎஸ்கே அணி 140 ரன்களுக்குள் சுருண்டது. ரபாடா, ரஷித், சிராஜ் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர். இந்த தோல்வி குறித்து சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், பேசுகையில்,‘‘இந்த சீசன் எங்களுக்கு மிகவும் சவாலாக இருந்தது. தொடக்கத்தில் அடுத்தடுத்து 3 போட்டிகளில் தோற்றாலும், பின்னர் சிறப்பாக மீண்டு வந்து வெற்றிகளைப் பெற்றோம்.

ஆனால், முக்கியமான கட்டத்தில் வீரர்களுக்கு ஏற்பட்ட காயங்கள் எங்களைப் பலவீனப்படுத்திவிட்டன. குறிப்பாக கோஷ் மற்றும் ஓவர்டன் போன்ற வீரர்கள் பாதியில் விலகியது அணியின் சமநிலையை நிலைகுலையச் செய்தது. கடந்த 3 போட்டிகளில் ஒரு தரமான பேட்ஸ்மேன் அல்லது பந்துவீச்சாளர் இல்லாமல் விளையாடும் சூழலுக்குத் தள்ளப்பட்டோம். அனுபவமில்லாத இளம் அணி சிஎஸ்கே ஒரு மாற்றத்தை நோக்கிச் செல்லும் அணி என்பதைப் பலர் புரிந்துகொள்வதில்லை. எங்கள் அணியில் 8 முதல் 10 வீரர்கள் 20 போட்டிகளுக்கும் குறைவாக விளையாடியவர்கள். ரஹானே, அம்பத்தி ராயுடு போன்ற அனுபவ வீரர்களுக்குப் பிறகு இளம் வீரர்களைக் கொண்டு அணியைக் கட்டமைப்பது எளிதல்ல. கார்த்திக் சர்மா, உர்வில் படேல் போன்றோருக்கு நடப்பு சீசன் ஒரு சிறந்த பாடமாக இருக்கும். இவ்வளவு நெருக்கடிக்கு மத்தியிலும் வெளியூர் மைதானங்களில் 6 போட்டிகளில் வெற்றி பெற்றது எங்களுக்குப் பெருமை அளிக்கிறது.

தோனி அடுத்த ஆண்டு விளையாடுவாரா என்பதை அடுத்த ஆண்டு தான் நாம் தெரிந்துகொள்ள முடியும். இக்கட்டான நேரங்களில் அவர் களத்தில் இருப்பது அணிக்கு மிகப்பெரிய பலம். கடைசி ஓவர்களில் அவர் வந்து ஆட்டத்தின் போக்கையே மாற்றுவார். அவர் இல்லாதது எங்களுக்குப் பெரிய இழப்பு தான். இருப்பினும், தற்போதுள்ள இளம் வீரர்களின் செயல்பாட்டில் நான் திருப்தி அடைகிறேன்’’ என்றார். இந்தத் தோல்வியின் மூலம் 5 முறை ஐபிஎல் கோப்பை வென்ற சிஎஸ்கே அணி நடப்பு சீசனில் பிளே-ஆப் வாய்ப்பை இழந்து வெளியேறியிருப்பது ரசிகர்களைப் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. தொடர்ந்து 2024, 2025 மற்றும் 2026 ஆகிய மூன்று ஐபிஎல் தொடர்களில் சிஎஸ்கே அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறாமல் வெளியேறி இருப்பது குறிப்பிடத்தக்கது.

 

Tags : Gujarat ,CSK ,Ruduraj ,Ahmedabad ,Gujarat Titans ,Chennai Super Kings ,IPL ,
× RELATED தொடர்ந்து 3வது முறையாக ப்ளே ஆப்...