மும்பை: இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா, ஒருநாள் போட்டிகளில் மீண்டும் களமிறங்க ஆயத்தமாகி வருகிறார். 2027 உலகக் கோப்பைக்கான அவரது உடற்தகுதியை உறுதிப்படுத்துவதுடன், இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் அவர் மீண்டும் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அணிக்காக ஜஸ்பிரித் பும்ரா ஒருநாள் போட்டியில் விளையாடி இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது. கடைசியாக 2023 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக களம் இறங்கினார். அதில் இந்தியா 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோற்றது. அதன்பிறகு, பும்ரா டெஸ்ட் மற்றும் இரண்டு டி20 உலகக் கோப்பைகளிலும், ஐபிஎல் தொடர்களிலும் தீவிரமாகப் பங்கேற்றார். ஆனால், பும்ரா ஒருநாள் போட்டியில் எப்போது களமிறங்குவார் என்பது குறித்த குழப்பம் நீடித்தது. 2027 உலகக் கோப்பைக்காக பும்ராவின் பணிச்சுமை கவனமாக நிர்வகிக்கப்படவுள்ளது. 50 ஓவர் போட்டிகளுக்கு அவர் முக்கியத்துவம் அளிக்க அணி நிர்வாகம் எதிர்பார்க்கிறது.
இங்கிலாந்து ஒருநாள் தொடரில் அவர் களமிறங்கக்கூடும் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கிறது. 2026 டி20 உலகக் கோப்பைக்கு முன் பும்ரா புத்துணர்ச்சியுடன் இருக்க அவரது பணிச்சுமை நிர்வகிக்கப்பட்டதை போல் தற்போதும் மேற்கொள்ளப்பட உள்ளது. ஒருநாள் போட்டிகளில் அவரது பங்கேற்பு குறைந்த அளவிலே இருக்கும். ஆனாலும், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்கா போன்ற முக்கிய டெஸ்ட் தொடர்களில் பும்ரா விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவின் தலைசிறந்த வேகப்பந்து வீச்சாளரான அவரின் பணிச்சுமையை குறைக்க பல வடிவப் போட்டிகளிலிருந்தும் அடிக்கடி ஓய்வளிக்கப்படுகிறார். இந்திய அணிக்கான அவரது முக்கியத்துவம் கருதி, நீண்டகால இலக்குகள், குறிப்பாக முக்கியமான ஐசிசி போட்டிகள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டே அவரது அட்டவணை பெரும்பாலும் வடிவமைக்கப்படுகிறது.
