பண்ருட்டியில் இருந்து வேலூர் மார்க்கெட்டிற்கு பலாப்பழம் வருகை அதிகரிப்பு: விலையும் சரிவு

வேலூர்: பண்ருட்டியில் இருந்து வேலூர் மார்க்கெட்டிற்கு பலாப்பழம் வரத்து இன்று அதிகரித்துள்ளது. இதனால் விலையும் குறைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

வேலூர் நேதாஜி மார்க்கெட்டிற்கு ஆந்திரா, கர்நாடகா போன்ற வெளிமாநிலங்கள் மற்றும் ஓசூர், ராயக்கோட்டை, கிருஷ்ணகிரி உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து லாரி உள்ளிட்ட வாகனங்களில் காய்கறிகள், பழங்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன. அதேபோன்று வேலூரை சுற்றியுள்ள பகுதிகளில் விளையும் காய்கறிகள் மொத்தம் மற்றும் சில்லரை விலையில் மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படுகிறது இந்நிலையில் பண்ருட்டி மற்றும் கடலூர் பகுதிகளில் இருந்து பலாப்பழங்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. பலாப்பழம் சீசனான ஏப்ரல் தொடங்கி ஜூன், ஜூலை வரையுள்ள காலக்கட்டத்தில் வேலூருக்கு 5 லாரிகளில் தினமும் பலாப்பழம் வரத்து இருக்கும். ஆனால் கடந்த ஒரு வாரமாக வரத்து அதிகரித்துள்ளது.

குறிப்பாக தற்போது பண்ருட்டி வட்டாரத்தில் இருந்து பலாப்பழங்கள் வரத்து தொடங்கியுள்ளது. வேலூர் நேதாஜி மார்க்கெட்டிற்கு இன்று விற்பனைக்காக வந்த பலாப்பழங்கள் ரூ.50 முதல் ரூ.500 வரை எடைக்கேற்ப விற்பனையாகிறது. இதுகுறித்து பலாப்பழ வியாபாரிகள் கூறுகையில், ‘வேலூர் நேதாஜி மார்க்கெட்டுக்கு பலாப்பழம் வரத்து அதிகரித்துள்ளது.
இன்று மட்டும் 10 லாரிகளில் பண்ருட்டியில் இருந்து பலாப்பழங்கள் வந்துள்ளது. கடந்த ஒரு வாரமாக வரத்து நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. இதனால் விலையும் குறைந்துள்ளது.

சுட்டெரிக்கும் வெயிலால் பொதுமக்கள் நடமாட்டம் குறைவாக இருப்பதால், சிறு வியாபாரிகள் பலாப்பழத்தை வாங்கி செல்ல தயக்கம் காட்டுகின்றனர். இதனால், பலாப்பழம் விற்பனை மந்தமாக உள்ளது. இனி வரும் நாட்களில் வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்கும் என்பதால், பலாப்பழம் விற்பனையும் மேலும் குறைய வாய்ப்பு உள்ளது’ என்றனர்.

Related Stories: