காரைக்கால்: காரைக்கால் – பேரளம் இடையே ரயில் போக்குவரத்து சேவை 40 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் துவங்கப்பட்டுள்ளது.
முன்னதாக கடந்த ஆண்டு இதற்கான இறுதிகட்ட சோதனை நடைபெற்றது. அதனை தொடர்ந்து இந்த ஒரு ஆண்டுகளாக சரக்கு ரயில் போக்குவரத்து சேவை மட்டும் நடைபெற்று வந்த நிலையில் இன்று முதல் காரைக்கால் – பேரளம் இடையிலான பயணிகள் ரயில் போக்குவரத்து தொடங்கியது.
இதனையடுத்து இன்று மக்களின் பயன்பாட்டிற்கு வந்த திருநள்ளாறு ரயில் நிலையத்தில் காரைக்காலில் இருந்து பேரளம் வழித்தடத்தில் மயிலாடுதுறைக்கு செல்கின்ற ரயிலுக்கு, காரைக்கால் ரயில் பயணிகள் சங்கம் மற்றும் திருநள்ளாறு பகுதி மக்கள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும், 40 ஆண்டுகளுக்கு பிறகு திருநள்ளாறு பகுதியில் ரயில் வந்ததால் பொதுமக்கள் இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.
இந்நிலையில் ஆன்மீக தலங்கள் அமைந்துள்ள திருநள்ளாறு கோயில், நாகூர் தர்கா மற்றும் வேளாங்கண்ணி ஆலயம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளுக்கும் பொதுமக்கள் சிரமமின்றி போகலாம். மேலும் இந்த ரயில் போலவே திருச்செந்தூர், ராமேஸ்வரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்ல தங்களுக்கு ரயில் சேவை வேண்டும் என்று காரைக்கால் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
