உடன்குடி, மே 20: செட்டியாபத்தில் பனை தொழிலாளி வீட்டின் ஓட்டை பிரித்து நகை, பணத்தை திருடிச் சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர். உடன்குடி அருகே செட்டியாபத்து பெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்த முருகேசன் (62). இவர், கடந்த 40 ஆண்டுகளாக பனைத் தொழில் செய்து வருகிறார். இவருக்கு ஒரு ஓட்டு வீடும், ஒரு காரை வீடும் உள்ளது. ஓட்டு வீட்டில் பதநீர் காய்ச்சி வருகிறார். அருகில் உள்ள மற்றொரு வீட்டில் மனைவியுடன் வசித்து வருகிறார்.
சம்பவத்தன்று வழக்கம்போல் பதநீர் காய்ச்சி வீட்டு இரவு ஓட்டு வீட்டை பூட்டி விட்டு அருகிலுள்ள வீட்டுக்குச் சென்று விட்டார். மறுநாள் அதிகாலை 5 மணிக்கு பதநீர் இறக்க பொருட்கள் எடுக்க ஓட்டு வீட்டுக்குச் சென்றபோது மர்ம ஆசாமிகள் வீட்டின் மேல் பகுதியில் உள்ள ஓட்டை பிரித்து உள்ளே புகுந்து பீரோவில் இருந்த 1 1/4 பவுன் தங்க செயின், வெள்ளி கொலுசு, ரொக்கப்பணம் ரூ.65 ஆயிரம் ஆகியவற்றை திருடிச் சென்றிருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து முருகேசன் அளித்த புகாரின் பேரில் குலசேகரன்பட்டினம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
